ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் களத்தில் குதித்தனர் தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரம்
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்கவேண்டும் என்று தமிழக அரசும், பல்வேறு அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன.
போராட்டம் தீவிரம் அடைந்தது
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி விட்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரியும், விவசாயிகள் தற்கொலையை தடுக்க வலியுறுத்தியும் சென்னை தரமணி டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று கல்லூரி முன் கூடி பெருங்குடி எம்.ஜி.ஆர்.சாலையில் ஊர்வலமாக சென்றனர். இது பற்றி தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், ஊர்வலமாக செல்லாமல் கல்லூரி முன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு கூறினார்கள். அதற்கு மாணவர்கள், நாங்கள் அமைதியான முறையில் ஊர்வலம் செல்கிறோம் என்று கூறினார்கள். இதையடுத்து போலீசார் அனுமதி வழங்கினர்.
அதன்பிறகு ஊர்வலமாக சென்ற மாணவர்கள் மீண்டும் கல்லூரி முன் வந்தடைந்தனர். அங்கு, ஜல்லிக்கட்டு நடத்த ஆதரவு தெரிவித்து சிறிது நேரம் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், பின்னர் கல்லூரி வளாகத்துக்குள் சென்றனர்.
கடைகள் அடைப்பு
இதே கோரிக்கையை வலியுறுத்தி, மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த வெள்ளலூரைச் சுற்றியுள்ள கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி வெள்ளலூரைச் சுற்றியுள்ள கிராமங்களான இடையவலசை, மட்டங்கிபட்டி, மேலவலசை உள்ளிட்ட 60 கிராம மக்கள் நேற்று வெள்ளலூரில் ஒன்று கூடினர்.
இதேபோன்று இந்த கிராமங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் தங்கள் கடைகளை அடைத்து விட்டு வெள்ளலூர் வந்தனர். வெள்ளலூரில் இருந்து 10 கிலோமீட்டர் தூரம் நடைபயணமாக வந்து மேலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த அவர்கள் முடிவு செய்தனர். ஆனால், அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
ஆர்ப்பாட்டம்
இதைத்தொடர்ந்து கார், வேன், மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக மேலூர் வந்தனர். மேலூர் ஊர் எல்லையில் இருந்து நடைபயணமாக மேலூர் பஸ்நிலையம் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், கிராம பெரியவர்கள் தாசில்தார் தமிழ்ச்செல்வியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இளைஞர்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
இதேபோன்று, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மேலூர் அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போலீஸ் தடியடி
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரையில் தமுக்கம் மைதானத்தில் திரண்ட பல்வேறு கல்லூரிகளின் மாணவர்கள் ஊர்வலமாக சென்று, கலெக்டரிடம் மனு கொடுக்க முடிவு செய்தனர். கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்ற அவர்கள் விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா‘வை கண்டிக்கும் வாசகங்கள் எழுதிய பாதகைகளை வைத்திருந்தனர்.
ஊர்வலம், திருவள்ளுவர் சிலை அருகே வந்தபோது, போலீசார் தடுப்புகள் அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் அதனையும் மீறி மாணவர்கள் முன்னேறிச் சென்றனர்.
இதனால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைக்க முயன்றனர். ஆனால் மாணவர்கள் கலைந்து செல்லாமல் அங்குள்ள பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் மாணவர்கள் சிலர் சென்று கலெக்டரிடம் மனு கொடுத்த பின் அனைவரும் கலைந்து சென்றனர்.
கைது செய்தனர்
இதற்கிடையே, மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்து மதுரை ‘அவுட் போஸ்ட்’ பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 55 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
இதுபோல், மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து கோரிப்பாளையம் தேவர் சிலை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 136 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவனியாபுரம் பகுதியில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்று கோஷமிட்டவாறு அவனியாபுரம் பஸ் நிலையத்தில் இருந்து பெரியார் சிலை வரை ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரபட்டியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் அங்கும் பெரியகலையம்புத்தூரிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
திருச்சியில் சாலைமறியல்
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க கோரியும், ‘பீட்டா’ அமைப்பை தடை செய்ய கோரியும் திருச்சியில் வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா அருகே ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டனர்.
அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், ‘பீட்டா’ அமைப்புக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தி கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். கலெக்டர் அலுவலகம் அருகே வந்ததும் அலங்கரிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளை ஒன்றை மாணவர்கள் இழுத்து வந்தனர். இதைக்கண்ட போலீசார் காளையை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு கூறினர். இதனால் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மாணவர்கள் கலெக்டர் அலுவலக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன் மீண்டும் மாணவர்களிடம் பேசினார். இதில் சமாதானம் அடைந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
தஞ்சாவூர்
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் இளைஞர்கள், அனைத்து கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் காளைமாட்டுடன் வந்திருந்தார்.
பின்னர் ஆர்ப்பாட்டம் முடிந்து கலைந்து சென்ற போது ஒரு பிரிவினர் திடீரென தஞ்சை ஆற்றுப்பாலத்தில் இருந்து அண்ணாசிலை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி ஊர்வலமாக செல்லக்கூடாது என தெரிவித்தனர். ஆனால் போலீசாரின் அனுமதியை மீறி அவர்கள் அண்ணாசிலை வரை ஊர்வலமாக செல்கிறோம் என கூறிச் சென்றனர்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி திருவாரூரில் வர்த்தக சங்கத்தினர் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டையில் நேற்று 2-வது நாளாக மன்னர் கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
ரெயில் மறியலில் ஈடுபடு முயற்சி
கோவையில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் நேற்று ரெயில் மறியலில் ஈடுபடுவதற்காக ரெயில் நிலையம் முன்பு திரண்டனர். கோஷம் எழுப்பியபடி ரெயில் நிலையத்துக்குள் செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் ரெயில் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், ரெயில் நிலையத்துக்குள் சென்று மறியலில் ஈடுபட முயன்ற பாரத் சேனா அமைப்பினர் 26 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி கோவை அனைத்து கல்லூரி மாணவர் பேரவை சார்பில் தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பூர்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் தன்னார்வ அமைப்பினர், தொழில் துறையினர், அரசியல் கட்சியினர் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது கல்லூரி மாணவர்கள், நாட்டு மாடுகளை காப்பாற்ற ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை கைகளில் ஏந்தியபடி நின்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து அங்கு வைக்கப்பட்டு இருந்த பிரமாண்ட பலகையில் அனைவரும் கையெழுத்தை பதிவு செய்தனர்.
கிருஷ்ணகிரி
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் 700 பேர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேராசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி கல்லூரிக்கு செல்லுமாறு கூறினார்கள். இதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் சாலை மறியலை கைவிட்டு கல்லூரிக்குள் சென்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி புதுவை சட்டக்கல்லூரி மாணவர்கள் மறைமலை அடிகள் சாலையில் சுதேசி மில் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதேபோல் தாகூர் கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நன்றி : தினத்தந்தி