ஜல்லிக்கட்டு என்று நடத்தாமல் ஏறு தழுவுதல் விழாவை தமிழக அரசு அறிவிக்கலாம் இல.கணேசன்
சென்னையில் பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்
ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு சிறப்பு உள்ளது. அந்த வகையில் பொங்கல் பண்டிகை தமிழகத்தின் சிறப்பு ஆகும். அதில் ஜல்லிக்கட்டு இல்லாமல் பொங்கல் நிறைவடையாது.
தற்போது ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தீர்ப்பு தரப்படாமல் உள்ளது. நீதிபதி மக்களின் மன உணர்வை புரிந்து முடிவு செய்து நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும். வழக்கு இருந்தாலே மத்திய அரசால் தலையிட முடியாது. அப்படி இருக்கும்போது, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மத்திய அரசால் அதில் தலையிடுவதற்கு வாய்ப்பு இல்லை.
ஏறு தழுவுதல் விழா
ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். அது இயற்கையான சூழ்நிலை. விவரம் தெரிந்தவர்கள் இதை புரிந்து கொள்வார்கள். ஒன்று செய்யலாம். இந்த ஆண்டு தமிழக அரசு ஜல்லிக்கட்டு என்று நடத்தாமல் திட்டமிட்டு ஏறு தழுவுதல் விழாவை அறிவிக்கலாம். எல்லோரும் சேர்ந்து அதை சிறப்பாக கொண்டாடலாம்.
அதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு இருக்கிறது. முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பரிசீலனை செய்ய வேண்டும். நான் ஆளுங்கட்சியை சார்ந்தவனாக மட்டும் இல்லாமல் இருந்தால் நானும் இறங்கி போராடுவேன். ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதில் மிக தீவிரமாக இருக்கிறோம்.
ஜல்லிக்கட்டு பற்றி கருத்து தெரிவிப்பதற்கு காங்கிரஸ், தி.மு.க.விற்கு யோக்கியதை இல்லை. இவர்கள் தடுத்து இருந்தால் தடை வந்திருக்காது. கடந்த ஆண்டே ஜல்லிக்கட்டு சிறப்பாக நடந்து இருக்கும்.
பீட்டாவுக்கு தடை
நாங்கள் ஒரு அவசர சட்டம் கொண்டு வந்தோம். ஆனால் பீட்டா அமைப்பு நீதிமன்றத்துக்கு சென்று அதை தடுத்துவிட்டது. ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் பீட்டா அமைப்பு மாமிசத்துக்காக போகும் காளைகளை தடுக்கவில்லை.
இவர்கள் ஏதோ ஒரு உள்நோக்கத்தோடு செயல்படுகிறார்கள். என்னை கேட்டால் ஜல்லிக்கட்டை தடை செய்ய தேவையில்லை. பீட்டா அமைப்பை தான் தடை செய்ய வேண்டும்.
ஜல்லிக்கட்டு நிச்சயமாக நடக்கும். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : தினத்தந்தி