பொங்கல்-காணும் பொங்கலையொட்டி சென்னையில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
14-ந் தேதி அன்று (சனிக்கிழமை) சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. 15-ந் தேதி அன்று (ஞாயிற்றுக்கிழமை) மாட்டுப்பொங்கலும், 16-ந் தேதி அன்று (திங்கட்கிழமை) காணும் பொங்கல் விழாவும் கொண்டாடப்பட இருக்கிறது.
இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள், நடைபெறாமல் தடுப்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் செய்துள்ளார். கூடுதல் கமிஷனர்கள் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளிடம் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். மேற்கண்ட 3 நாட்களிலும் சென்னை நகரில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள். போலீஸ் ரோந்துப்பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
காணும் பொங்கல்
16-ந் தேதி காணும்பொங்கல் தினத்தன்று சென்னையில், மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை போன்றவற்றில் பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடுவார்கள். இதுமட்டுமல்லாமல் சென்னையில் உள்ள கிண்டி சிறுவர்பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதும். எனவே காணும் பொங்கல் தினத்தன்று பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் மட்டும் 2 ஆயிரம் போலீசார் அன்றைய தினம் குவிக்கப்பட உள்ளனர். 5 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது. சிறிய கட்டுப்பாட்டு அறை ஒன்றும் மெரினாவில் திறக்கப்பட உள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிக்க, கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் குழந்தைகளின் கையில் அடையாள அட்டை ஒன்றை கட்டிவிடுவதற்கு போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
அந்த அடையாள அட்டைகளில் குழந்தைகளின் பெற்றோர் விவரம், முகவரி மற்றும் செல்போன் எண்கள் குறிக்கப்பட்டிருக்கும். அதை வைத்து, காணாமல் போய் மீட்கப்படும் குழந்தைகளின் பெற்றோரை அழைத்து, குழந்தைகளை ஒப்படைப்பதற்கு வசதியாக இந்த ஏற்பாட்டை போலீசார் செய்துள்ளனர்.
குதிரைப்படை
மெரினா, எலியட்ஸ், திருவான்மியூர், நீலாங்கரை போன்ற கடற்கரைப்பகுதிகளில் கடலில் குளிக்கவும், கடலில் படகு சவாரி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீஸ் தடையை மீறி கடலில் குளிப்பவர்களை தடுப்பதற்காக குதிரைப்படை போலீசார் நிறுத்தப்பட உள்ளனர். இதற்காக குதிரைப்படை போலீசார் இப்போதே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடலில் விழுபவர்களை மீட்பதற்காக 50 நீச்சல் வீரர்களை அனுப்பிவைப்பதற்கு கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஏற்பாடு செய்துள்ளார்.
நன்றி : தினத்தந்தி