Breaking News
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு சசிகலா மாலை அணிவித்தார் நூற்றாண்டு விழா சிறப்பு மலரும் வெளியீடு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா காலை 10.30 மணிக்கு போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்டார். வழி நெடுக அ.தி.மு.க. தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். காலை 10.40 மணிக்கு கட்சி அலுவலகத்துக்கு வந்த அவர், அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ரோஜாப்பூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி தொண்டர்கள் என பலர் அங்கு கூடியிருந்தனர்.

சிறப்பு மலர் வெளியீடு
தொடர்ந்து, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா சிறப்பு மலரின் 2 தொகுப்பை வி.கே.சசிகலா வெளியிட்டார். அவரிடம் இருந்து முதல் தொகுப்பு புத்தகத்தை கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனனும், 2–வது தொகுப்பு புத்தகத்தை கட்சியின் முன்னாள் அமைப்பு செயலாளர் எம்.எஸ்.நிறைகுளத்தானும் பெற்றுக்கொண்டனர். மேலும், கிளாசிக் பப்ளிகே‌ஷன்ஸ் தயாரித்துள்ள ‘வள்ளல் திலகம் எம்.ஜி.ஆர்.’ என்ற புத்தகத்தையும் வி.கே.சசிகலா வெளியிட்டார். இதன் முதல் பிரதியை கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளரும், சட்டப்பேரவை துணைத்தலைவருமான பொள்ளாச்சி ஜெயராமன் பெற்றுக்கொண்டார்.

அதன்பின்னர், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மத்திய அரசு வெளியிட்ட சிறப்பு அஞ்சல் தலையை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவிடம் வழங்கினார். தொடர்ந்து, திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே எம்.ஜி.ஆர். சிலையை சுத்தம் செய்து வரும் பி.நடராஜன் குடும்பத்தினரின் வறுமை சூழ்நிலையை அறிந்து ரூ.50 ஆயிரம் வரைவோலையை வி.கே.சசிகலா வழங்கினார். இதேபோல், திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் பி.எஸ்சி. விலங்கியல் 2–ம் ஆண்டு படித்து வரும் மாணவி ஸ்ரீதேவியின் கல்லூரி மற்றும் விடுதி கட்டணமாக ரூ.20 ஆயிரத்திற்கான வரைவோலையை ‘புரட்சி தலைவி ஜெயலலிதா பெஸ்ட் சேரிடபிள் டிரஸ்ட்’ சார்பில் அவர் வழங்கினார்.

நலிந்த தொழிலாளர்களுக்கு உதவி
தொடர்ந்து, கட்சி அலுவலகத்தின் முதல் மாடிக்கு சென்ற வி.கே.சசிகலா, அங்கு நின்றபடி தொண்டர்களை நோக்கி இரட்டை விரலை காட்டினார். தொண்டர்களும் உற்சாகமாக அவருக்கு இரட்டை விரலை காட்டினார்கள். பின்னர், அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 104 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் 1 கோடியே 4 லட்சம் ரூபாயை குடும்ப நல நிதியுதவியாக வி.கே.சசிகலா வழங்கினார்.

அதன்பின்னர், காலை 11.40 மணிக்கு அங்கிருந்து வி.கே.சசிகலா காரில் புறப்பட்டு சென்றார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சியையொட்டி, நேற்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும், நூற்றாண்டு விழா சிறப்பு மலரையும் அவர் வெளியிட்டார்.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.