Breaking News
ஜெயலலிதா மரணத்தில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை: அரசியலில் எனது முடிவை ஜெயலலிதா பிறந்தநாளில் வெளியிடுவேன்; ஜெ.தீபா பேட்டி

எம்.ஜி.ஆர் உருவபடத்துக்கு மரியாதை
மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி, மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, சென்னை தியாகராயநகர், சிவஞானம் தெருவில் உள்ள தன்னுடைய வீட்டு முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா திருஉருவ படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் தீபா கூறியதாவது:–

அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடந்த ஒரு மாதமாக தினசரி என்னை வந்து சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பாக மாநிலம் முழுவதும் இருந்து தினசரி வரும் தொண்டர்கள் என்னை நம்பிக்கையோடு வந்து பார்த்தனர்.

அவர்களுடைய நம்பிக்கையை நான் ஒருபோதும் வீண் அடிக்க மாட்டேன். ஏற்கனவே நான் அரசியலில் குதித்து விட்டேன். வரும் நாட்களில் தீவிரமாக அரசியலில் ஈடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

நினைவு இல்லம்
தியாகராயநகர், ஆற்காடு தெருவில் உள்ள எம்.ஜி.ஆர், நினைவு இல்ல வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு காலை தீபா மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தீபாவின் ஆதரவாளர்கள் நேற்று காலை 5.45 மணி முதல் வருகை தர ஆரம்பித்தனர்.

காலை 8.15 மணி அளவில் தீபா அங்கு வந்து எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஆதரவாளர்கள் சாலை மறியல்
பின்னர் அண்ணாசாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு சென்று தீபா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கும் சென்று மரியாதை செலுத்தினார். பின்னர், அங்குள்ள ஜெயலலிதாவின் சமாதியில் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

முன்னதாக எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த தீபாவை போலீசார் சிறிது நேரம் காத்திருக்க வைத்ததையும், தீபாவுக்கு போதிய பாதுகாப்பு வழங்காததையும் கண்டித்து அவருடைய ஆதரவாளர்கள் காமராஜர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் சமரசம் செய்து ஆதரவாளர்களை கலைந்து போக செய்தனர்.

எம்.ஜி.ஆர். பிறந்தநாளில் அரசியல் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவதாக தீபா சொல்லி இருந்தார். அதன்படி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சாதாரண குடும்ப பெண்
அ.தி.மு.க. தொண்டர்கள், நம் நாட்டை வல்லரசாக்கும் மக்கள், எதிர்காலத்தை மாற்றி அமைக்கும் வல்லமை பெற்ற இளைஞர்கள் என்று பல தரப்பினர் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தினர். நான் எளியமுறையில் வாழ்க்கை நடத்தும் ஒரு சாதாரண குடும்ப பெண். எனக்கு குடும்பம், தனிவாழ்க்கை என பொறுப்புகள் இருக்கிறது.

இருப்பினும் என்மீது வைத்திருக்கும் பலரது நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற உறுதி எனக்கு இருக்கிறது. இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் தொடர்ந்து உறுதியோடு பணியாற்றுவேன். என் தாய்வீடான தமிழ்நாடும், என் தாய்மொழியாம் தமிழ் மொழியும் என் இரண்டு கண்களாக இருக்கும்.

இன்று முதல் புதிய பயணம்
அ.தி.மு.க.வின் உண்மை தொண்டர்கள் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்றார்கள். அதன் அடிப்படையில் இன்று முதல் புதிய பயணத்தை தொடங்க இருக்கிறேன்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்தநாளில் என் வாழ்க்கையின் புது அத்தியாயத்தை தொடங்குகிறேன். நம்முடைய நோக்கம் தூய்மையானது. தீர்க்கமானது. நம்முடைய லட்சியம் உறுதியானது. நம்முடைய வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும். ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றும் வகையில் நம்முடைய களப்பணிகள் இருக்க வேண்டும்.

ஜெயலலிதா பிறந்தநாளில் முடிவு
ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24–ந் தேதி அன்று அரசியலில் நான் ஈடுபடுவது குறித்து அடுத்தகட்ட முடிவை வெளியிடுவேன். மக்கள், தொண்டர்கள், அனைவருடைய கருத்துகளையும் சேகரித்து குறுகிய காலக்கட்டத்தில் அரசியல் பணிகளை மேற்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். மக்களுக்காக பணியாற்ற காத்து இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து நிருபர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

ஜெயலலிதா மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை
கேள்வி:– சென்னை ஐகோர்ட்டு, ஜெயலலிதா இறப்பில் சந்தேகம் என்ற வழக்கில் அவருடைய உறவினர்கள் ஏன் தங்களை இணைத்துக்கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பி இருக்கிறதே?

பதில்:– என் உடன்பிறந்த சகோதரர் தீபக், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அவருடன் சில நாட்கள் இருந்திருக்கிறார். அவருடைய இறப்பில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இயற்கையாகவே சந்தேகம் ஏற்பட்டு இருந்தால் நான் வழக்கு தொடர்ந்து இருப்பேன்.

கேள்வி:– புதிய கட்சி தொடங்குவீர்களா?

பதில்:– என்னுடைய அரசியல் திட்டங்களை பிப்ரவரி 24–ந் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று வெளியிட வேண்டும் என்பது என்னுடைய ஆசை.

கேள்வி:– ஜெயலலிதா வாழ்ந்த பகுதியை அரசுடைமையாக்க வேண்டும் என்று பரவலாக பேசப்படுகிறதே?

பதில்:– இதை மக்களிடம் தான் கேட்கவேண்டும். சுற்றுப்பயணத்தின் போது மக்களிடம் கருத்து கேட்பேன்.

ஒப்பற்ற ஆற்றல் மிக்கவர்
கேள்வி:– எம்.ஜி.ஆர். பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறேன் என்று சொன்னீர்கள். அது என்ன?

பதில்:– அதாவது, இதுவரை நான் அரசியலுக்கு வருவேனா? வரமாட்டேனா? ஓடிவிடுவேனா? பயந்துவிடுவேனா? மக்கள் பணியாற்றுவேனா? ஆற்ற மாட்டேனா? என்ற பல கேள்விகள் எழுந்தன. அதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். ஆகையால் இந்த நாளில் நான் அரசியலில் ஈடுபடுவேன். மக்கள் பணியாற்றுவேன் என்பதை இன்றையதினம் தெளிவுபடுத்துகிறேன்.

கேள்வி:– பா.ஜ.க. உங்களுக்கு ஆதரவு அளிக்கிறதா?

பதில்:– அரசியல் ரீதியாக எந்த கட்சியுடனும், எந்த தலைவருடனும் நான் பேசவில்லை.

கேள்வி:– சசிகலா சகோதரர் திவாகரன் பேசியதை நீங்கள் வரவேற்கிறீர்களா?

பதில்:– அவர் கூறியது வேடிக்கையாக இருக்கிறது. அது தவறான கருத்து. ஜெயலலிதா ஒப்பற்ற ஆற்றல் மிக்கவர். சுயமாக சிந்தித்து முடிவு எடுப்பவர். அதிகார தோரணையில் தான் பேசுவார். இன்னொருவர் பேச்சை கேட்கவே மாட்டார்.

பேனாவை மட்டும் தந்தால் போதும்
கேள்வி:– அ.தி.மு.க. பொது செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரே. அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:– என்னால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தவிர வேறு யாரையும் அ.தி.மு.க. பொது செயலாளராக ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுவாக பொது மக்களின் எண்ணம் எதுவோ, அது தான் என் எண்ணம்.

கேள்வி:– உங்களுடைய அத்தை (ஜெயலலிதா) என்ற முறையில் அவருடைய சொத்துகளை எதிர்பார்க்கிறீர்களா?

பதில்:– நான் எந்த சொத்துகளையும் எதிர்பார்க்கவில்லை. அவர் (ஜெயலலிதா) பயன்படுத்திய பேனாவை மட்டும் தந்தால் போதும்.

கேள்வி:– ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவீர்களா?

பதில்:– தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன். ஆனால் ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன் என்று இப்போது சொல்ல முடியாது.

கேள்வி:– ஆதரவாளர்களை சந்திக்க இருக்கிறீர்களா?

பதில்:– தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவாளர்களை சந்திக்க இருக்கிறேன். இன்றே தொடங்க ஆசை தான் எனக்கு.

ரஜினிகாந்த்
கேள்வி:– தமிழக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பணிகள் திருப்திகரமாக இருக்கிறதா?

பதில்:– அவருடைய பணிகள் நன்றாகவே இருக்கிறது.

கேள்வி:– நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசியலில் ஜெயலலிதா இறந்த பிறகு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது என்று கூறியிருக்கிறாரே? உங்கள் கருத்து என்ன?

பதில்:– பல தலைவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவிக்கின்றனர். அதை நான் நன்றாக கவனித்து வருகிறேன். இதை தவிர வேறு எந்த கருத்தையும் நான் தெரிவிக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

தீபா வீட்டு முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதாவின் உருவபடத்துக்கு நேற்று மாலை ஆதரவாளர்களுடன் தீபாவும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர்கள் மத்தியில் தீபா பேசினார்.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.