தாய்லாந்து அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தில் 20–ந்தேதி முதல் ஒரு வாரம் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. இதன் காரணமாக விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் உள்ளனர். வடகிழக்கு பருவமழை காலமும் முடிந்துவிட்டது. இந்த நிலையில் தாய்லாந்து அருகே புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:–
காற்றழுத்த தாழ்வு நிலையால் ஒரு வாரம் மழை
தாய்லாந்து அருகே புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. மேலும் அந்த பகுதியில் மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து தமிழகத்தை நோக்கி வரும். ஆனால் வலுப்பெறாது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 20–ந்தேதி முதல் 26–ந்தேதி வரை( ஒரு வாரம்) தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். இந்த மழை மிதமான மழையாக இருக்கும். மிதமான மழை என்பது அதிக பட்சமாக 4 செ.மீ. வரையாகும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கனமழை பெய்வதை இனிமேல் தான் உறுதி செய்ய முடியும்.
19–ந்தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை தான் நிலவும். இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.இதன் காரணமாக தமிழ்நாட்டில் 20–ந்தேதி முதல் 26–ந்தேதி வரை (ஒரு வாரம்) மழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.