நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர். சிறப்பு தபால் தலை வெளியீடு ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்
நூற்றாண்டு விழா
எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்த நாள் தமிழகமெங்கும் நேற்று கொண்டாடப்பட்டது. அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாகவும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆரின் உருவம் பொறித்த தபால் தலை மற்றும் தபால் கவர் ஆகியவற்றை வெளியிட முடிவு செய்யப்பட்டது.
இதற்கான விழா சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காலை 8.40 மணிக்கு வந்தார்.
ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்
அங்கு எம்.ஜி.ஆர். சிலைக்கு கீழே எம்.ஜி.ஆரின் படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்தப் படத்துக்கு முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் உள்பட பலர் எம்.ஜி.ஆர். படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து, எம்.ஜி.ஆரின் தபால் தலையை டெல்லி தபால் துறை தலைமை இயக்குனர் டி.மூர்த்தி வெளியிட்டார். அதை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.
பங்கேற்றோர்
எம்.ஜி.ஆர். தபால் தலை வெளியிடப்பட்ட மேடையில் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் பல அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தபால் கவர் வெள்ளை நிறத்தில் உள்ளது. அதன் இடதுபுறத்தில் எம்.ஜி.ஆர். சிரித்தபடி இருக்கும் மார்பளவு புகைப்படமும், அதன் கீழ் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற பெயர் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் புகைப்படம் தங்க நிறத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.11 ஆகும்.
அதுபோல் எம்.ஜி.ஆரின் சிறப்பு தபால் தலை அரக்கு வண்ணத்தில் அச்சிடப்பட்டுள்ளது. அதன் விலை ரூ.15 தபால் தலையில் அவரது பெயர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் என்று இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளது. தபால் கவரிலும், தபால் தலையிலும் ஒரே புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
நன்றி : தினத்தந்தி