ஜிஎஸ்டி அமல்படுத்துவதில் சிக்கல்..ஏப்ரலில் அமலாக வாய்ப்பில்லை: அருண் ஜேட்லி பேட்டி
டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடிவு ஏதும் எடுக்கப்படாமல் முடிந்தது. அடுத்த கூட்டம் பிப்ரவரி 18 ஆம் தேதி நடைபெறுகிறது.
நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவைகளுக்கு ஒரே சீரான வரி விதிப்பை அமல்படுத்தும் வகையில் (ஜிஎஸ்டி) வரி விதிப்பு முறையை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அதிகார வரம்பு தொடர்பாக தொடர்ந்து பிரச்சினை நீடித்து வந்தது. இதற்கு தீர்வு காணும் நோக்கில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் எட்டு முறை நடந்துள்ளது. இருப்பினும் முடிவு எதுவும் எட்டப்படாமலே கூட்டம் முடிவடைந்தது.
இந்த நிலையில் 9-வது முறையாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுகையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு அதிகாரம் தொடர்பாக இன்று நாள் முழுவதும் விவாதிக்கப்பட்டது.
வரும் நிதி ஆண்டு தொடங்கும் ஏப்ரல் 1 முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்க வாய்ப்பில்லை எனக் கூறினார். வரும் ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வரலாம் என நம்பிக்கை உள்ளதாகவும் அருண் ஜெட்லி கூறினார். மேலும், இந்த கவுன்சில் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டவில்லை.
இரட்டை கட்டுப்பாட்டு பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகளிடம் ஒருமித்த கருத்து இல்லை. கடல் மார்க்கமாக நடைபெறும் வர்த்தகத்தின் மீது வரி விதிக்கும் உரிமை மாநில அரசுக்கு தரப்படும்.
ஜி.எஸ்.டி. மசோதாவில் வரி விகிதம் மத்திய, மாநில அரசுகளால் சமமாக நடத்தப்படும். பிப். 18-ம் தேதி அடுத்த கவுன்சில் கூட்டம் நடக்கும் என்றார்.