புதுக்கோட்டை அருகே விஷால், திரிஷா படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்து எதிர்ப்பு
புதுக்கோட்டை அருகே நடிகர்கள் விஷால், திரிஷா படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்து ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்லது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த மாடுவீரர்களுக்கு ஆதரவாக சென்னையில் துவங்கிய போராட்டம் இன்று தமிழகம் முழுவதும் காட்டுத் தீ போல் பரவி நடைபெற்று வருகிறது.
சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்றிணைந்த லட்சக்கணக்கான இளைஞர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் தமிழகர்களின் பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு விளையாட்டை காக்க மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர். சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டம் 2வது நாளாக மிகத் தீவிரமடைந்துள்ளது.
அதேபோல் மதுரை, கோவை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தை தாண்டி கடல் கடந்து அமெரிக்கா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் போராட்டங்கள் வலுத்துள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் கடந்த இரு தினங்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதனிடையே நடிகர் சங்க தலைவர் விஷால், நடிகை திரிஷா ஆகியோருக்கு கண்ணீர் அஞ்சலி பதாகைகள் வைத்து செருப்பு மாலைகள் அணிவித்தும் போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
முன்னதாக நடிகை திரிஷா, நடிகர் விஷால் ஆகியோர் ஜல்லிக்கட்டை எதிர்ப்பதாக தகவல்கள் பரவியது. இதனால் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் இவர்கள் மீது கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.