போராட்டம் அமைதியாக தொடர்ந்தால் முழு பாதுகாப்பு அளிப்போம்: காவல்துறை எச்சரிக்கை
பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் போராட்டம் அமைதியாக தொடர்ந்தால் காவல்துறை முழு பாதுகாப்பு அளிக்கும் என கூடுதல் காவல்துறை ஆணையர் சங்கர் இளைஞர்களிடம் உறுதி அளித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும், அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று காலை தொடங்கிய போராட்டம் குளிர் காற்றுக்கு நடுவேயும் பல மணி நேரமாக நடந்து வருகிறது. இதனிடையே அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன் நடத்திய முதல் கட்ட பேச்சு வார்த்தை திருப்தி அளிப்பதாக போராட்டக்குழு பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் போராட்டக்காரர்கள் முதல்வர் பன்னீர்செல்வம் போராட்ட களத்திற்கு நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் ஜல்லிக்கட்டு நடத்த உறுதியான அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். போராட்டக்குழுவினர் முதல்வரின் அறிக்கையை பார்த்துவிட்டுத்தான் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று தெரிவித்ததால் போராட்டம் விடிய விடிய தொடர்கிறது.
போராட்டம் நடக்கும் இடத்தில் ஆயிரக்கணக்கில் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டம் தொடரும் என்று போராட்டக்குழு சொன்னபோது போராட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் பலத்த கோஷங்களை எழுப்பினர். அவர்களுடன் தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் சங்கர் பேச்சு வார்த்தை நடத்தினார். பொதுமக்களுக்கு தொல்லையில்லாமல் அமைதியாக போராட்டம் நடத்தினால் முழு பாதுகாப்பு அளிப்போம், எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் கூச்சல் இடவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.