ஷிப்ட் முடிஞ்சா போற கூட்டம்ன்னு நினைச்சியா.. நின்ன இடத்தை விட்டு நகராமல் போராடும் ஐடி ஊழியர்கள்!
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை, சிறுசேரி சிப்காட் வளாகத்தில் ஐடி நிறுவன ஊழியர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 5000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு கடந்த 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் விதித்தது. இதனால் ஜல்லிக்கட்டுக்கு உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு சிவகங்கை மாவட்டம் சிராவயல் ஆகிய ஊர்களிலும் தமிழகத்தின் இதர பகுதிகளிலும் கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
இதனால் ஜல்லிக்கட்டை நடத்த அவசர சட்டம் கொண்டுவரக் கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கானோர் தீவிர போராட்டத்தில் குதித்து உள்ளனர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை சிறுசேரி சிப்காட் வளாகத்தில் ஐடி நிறுவன ஊழியர்கள் நேற்று காலை முதல் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்
மாலை 3 மணிக்கு பின்னர் அனைத்து மென்பொருள் நிறுவன ஊழியங்களும் டி.சி.எஸ். அலுவலகத்தின் முன்பு ஒன்று கூடினர். பின்னர் அங்கிருந்து சிப்காட் வளாக நுழைவு வாயில் வரை பேரணியாக சென்றனர்.நேற்று காலை தொடங்கிய இந்த போராட்டம் விடிய விடிய நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 5000க்கும் மேற்பட்டோர் ஐ.டி. ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு நடைபெறும் வரை எங்களது போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.