ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு.. கடல் தாண்டியும் ஆதரவுக் குரல்.. சவுதியில் !
அபா: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சவூதியில் வசிக்கும் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள், மாணவர்கள் ஒன்று கூடி மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தலைநகர் சென்னை குலுங்கும் அளவிற்கு மெரினாவில் 3வது நாளாக விடிய விடிய போராட்டம் நடைபெற்று வருகிறது.வெளிநாடு வாழ் தமிழர்களும் அவர்கள் பணிபுரியும் இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் சவுதி அரேபியா, அபா நகர் அருகே உள்ள ஹூண்டாய் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரம் எனவே தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் நடைபெற வேண்டும் என அவர்கள் கூறினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பீட்டாவுக்கு எதிரான வாசகங்களையும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசகங்களையும் கைகளில் ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்திய அரசு விரைவில் ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்