வெள்ளை மாளிகைக்கு வந்தாரய்யா ட்ரம்ப் மருமகன்… அமெரிக்காவிலும் குடும்ப ஆட்சி!
வாஷிங்டன்(யு.எஸ்). அமெரிக்க புதிய அதிபராக டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 20ம் தேதி
பதவியேற்க உள்ளார். இந் நிலையில் வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக ட்ரம்பின் மருமகன் ஜேரட் கஷ்னர் நியமிக்கப் படுகிறார்.
தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய வியூகங்கள் வகுத்து, எழுதி வைத்துப் பேசாமல் இஷ்டம் போல் பேசி வந்த ட்ரம்பை டெலிப்ராம்டருக்குள் கொண்டு வந்து வெற்றிக்கொடி நாட்டியதில் கஷ்னருக்கு பெரும் பங்கு உண்டு.தற்போது வெள்ளை மாளிகையில் மூத்த ஆலோசகராக கஷ்னரை , ட்ரம்ப் நியமித்துள்ளார். உறவினர்களை அரசுப் பதவிகளுக்கு அதிபர் நியமிக்கக்கூடாது என்று 1967ம் ஆண்டு முதல் சட்டம் உள்ளது, வெள்ளை மாளிகை ஆலோசகர் பொறுப்புக்கு இந்த சட்டம் தடையில்ல என்பது ட்ரம்ப் தரப்பினர் வாதம்
ஜனநாயகக் கட்சியினரோ, மருமகனும் உறவினர் என்று சட்டத்தில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவருடைய தொழில் ரீதியான தொடர்புகளும் இந்த பொறுப்பும், அரசு நலன்களுக்கு முரண்பட்டதாக இருக்கிறது. கஷ்னரின் நியமனத்தை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று அறிவித்துள்ளனர்.
சமீபத்தில் சீன தொழில் அதிபரை கஷ்னர் சந்தித்த விவாகரத்தையும் அந்த சந்திப்பிற்கு பிறகு நடந்த முக்கிய ரியல் எஸ்டேட் பரிவர்த்தனையும் குறிப்பிடுகிறார்கள்.
கஷ்னரின் நியமனத்தை ஜனநாயகக் கட்சியின் சட்டக் கமிட்டி உறுப்பினர்கள், எளிதாக அனுமதிக்கப் போவதில்லை என்பதும் மட்டும் உறுதி.தனது நிறுவனத்தில் உள்ள பங்குகளை ட்ரஸ்ட்க்கு மாற்றப்போவதாக கஷ்னர் கூறியுள்ளார். அதன் மூலம் எந்த தனியார் நிறுவனத்திற்கும் அவருக்கும் நேரடி தொடர்பு இல்லை என்றாகிவிடும். மேலும் அரசிடமிருந்து சம்பளம் வாங்காமல் பணியாற்றப் போவதாகவும் கஷ்னர் கூறியுள்ளார்.
கஷ்னரின் மனைவி இவாங்காவுக்கு எந்த அரசுப் பொறுப்பும் வழங்கப்பட வில்லை. இவாங்கா ட்ரம்பின் நிறுவனங்களில் பொறுப்பு ஏற்று நடத்த மாட்டார் என்றும் ட்ரம்ப் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ட்ரம்பை போல் கஷ்னரும் ரியல் எஸ்டேட் தொழிலில் கொடி கட்டிப் பறப்பவர். ட்ரம்பின் மகள் இவாங்காவை 2009ம் ஆண்டு திருமணம் செய்தார்.
கஷ்னர் தம்பதியினருக்கு ஜோசப், தியோடர் என்று இரண்டு மகன்களும் அரபெல்லா என்ற மகளும் உள்ளனர். விரைவில் வெள்ளை மாளிகை உள்ள வாஷிங்டன் டிசி பகுதியில் உள்ள வீட்டிற்கு குடிபெயர உள்ளார்கள்.
என்ன தான் டெக்னிக்கலா சட்டப்படி நியமனம் சரி என்று நிருபித்தாலும், மிகவும் முக்கியத்துவம் வெள்ளை மாளிகையில் மூத்த ஆலோசகர் என்றால் குடும்ப ஆட்சி தானே!
அட அமெரிக்காவிலேயே குடும்ப ஆட்சி வந்தாச்சு.. நம்மூரில் குடும்ப ஆட்சியை சட்டபூர்வமாக்குங்கள் என்ற குரல்கள் எழாமல் இருந்தால் சரி.!