கடற்கரை சாலைகள் சீல் வைப்பு- வெளியிலிருந்து யாரும் உள்ளே வந்து விடாமல் தடுப்பு அமைத்தது போலீஸ்
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஒருவார காலமாக மாணவர்கள் போரடி வருகின்றனர். அவசர சட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறி போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என்று போலீசார் கோரிக்கை விடுத்தனர்
சட்ட முன்வடிவு நகலையும் மாணவர்களுக்கு அளித்தனர். ஆனாலும் போலீசாரின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர். இதனையடுத்து மாணவர்களை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர். வலுகட்டாயமாக அகற்றி வரும் போலீசுடன் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல மறுத்து கடலை நோக்கி இளைஞர்கள் சென்றனர்.
தேசிய கீதம் பாடியபடியே தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். இளைஞர்கள், பெண்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டனர். ஒருவரை ஒருவர் கைகளை பிடித்துக்கொண்டு கடலுக்குள் நின்றனர்.
நீங்கள் வந்தால் நாங்கள் கடலுக்குள் விழுந்து விடுவோம் என்று மிரட்டியதை அடுத்து போலீசார் அனைவரும் பின்னால் தள்ளிச் சென்றனர். இதனையடுத்து விரட்டப்பட்ட அனைவரும் ஒன்று கூடினர்.
இந்த நிலையில் மாணவர்கள், பொதுமக்கள் மீண்டும் ஒன்று கூடுவதை தடுக்கும் வகையில் கடற்கரைக்கு வரும் சாலைகள் அனைத்தும் போலீஸ் வசம் வந்துள்ளது. கடற்கரை சாலைகளில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
கடல் மணல் பரப்பில் இருந்து விரட்டப்பட்ட மாணவர்கள் கடல் அலை பகுதிக்குள் சென்றுள்ளனர். களங்கரை விளக்கம் பகுதிகளில் இருந்தும் அலை அலையாக வந்து குவிந்து வருகின்றனர். காவல்துறையே திரும்பி போ என்று மாணவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.
காவல்துறையினர், ஊடகத்துறையினர் வெளியேறுங்கள் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். மாணவர்களை எப்படி வெளியேற்றுவது என்று தெரியாமல் போலீசார் திகைத்து வருகின்றனர்.
சாலை வழியாக மாணவர்கள் வருவது தடுக்கப்பட்டுள்ளதால் கலங்கரை விளக்கம் பகுதிகளில் இருந்து மணற்பரப்பு வழியாக மாணவர்கள் குவிந்து வருகின்றனர்.
ஒருவார காலமாக அமைதியாக நடந்த போராட்டம் தற்போது ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மெரீனா கடற்கரை பகுதியில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.