‘நானும் தமிழ் மண்ணின் மைந்தன் தான்’ – மார்க்கண்டேய கட்ஜூ பெருமிதம் !
தமிழர்களிடம் அன்புள்ளமும், பெருந்தன்மையும் இருப்பதால்தான் நான் தமிழர்களை சந்திக்கும்போதெல்லாம் ‘நானும் ஒரு தமிழன்’ என்று அடிக்கடி பெருமையுடன் சொல்லிக் கொள்வது உண்டு என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ பெருமிதத்தோடு கூறியுள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் மார்க்கண்டேய கட்ஜூ கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். விரைவில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். தமிழக மக்களின் போராட்டம் வெற்றியை எட்டியுள்ள நிலையில் போராட்டத்தை மார்கண்டேய கட்ஜூ பாராட்டி உள்ளார்.
இந்நிலையில் நானும் ஒரு தமிழன் தான் என மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது பேஸ்புக் பதிவில், எனக்கு மறுபிறவி மீது நம்பிக்கை கிடையாது. ஒருவேளை மறுபிறவி இருப்பது உண்மையெனில், எனது முந்தைய பிறவியில் நான் நிச்சயம் தமிழனாக பிறந்திருப்பேன்.
நான் ஒவ்வொரு முறை தமிழகத்திற்கு வரும் போதும், எனது சொந்த வீட்டிற்கு வருவது போன்றே உணர்கிறேன். எனக்கு தமிழகத்தில் நிறைய நண்பர்கள் உள்ளனர். என் மீது தமிழர்கள் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளனர்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்று கொண்டது எனக்கு சில வழக்குகளில் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் சில முறை தமிழ் தெரிந்த வழக்கறிஞர்களிடம் ‘உட்காருங்க’ என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறேன். சில சமயங்களில் ‘தள்ளுபடி’ என்ற வார்த்தையையும் பயன்படுத்தி இருக்கிறேன். என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அமைக்கப்பட்டது போது நான் மதுரைக்கு வந்திருந்தேன். எனக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அப்போது சிலப்பதிகாரம் பற்றியும், கண்ணகி மதுரை நகரை எரித்தும் பற்றியும் பேசியதாகவும் நினைவு கூர்ந்துள்ளார்.
தமிழர்களிடம் அன்புள்ளமும், பெருந்தன்மையும் இருப்பதால்தான் நான் தமிழர்களை சந்திக்கும்போதெல்லாம் ‘நானும் ஒரு தமிழன்’ என்று அடிக்கடி பெருமையுடன் சொல்லிக் கொள்வது உண்டு. தமிழர்கள் நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன். தமிழ் மக்கள் வாழ்க.
இவ்வாறு அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.