குடிசை, வாகனங்களுக்கு தீ வைத்த போலீசார்.. வீடியோ பற்றி விசாரிக்கப்படும் – ஜார்ஜ்
ஜல்லிக்கட்டு நடத்த கோரி சென்னை மெரீனா கடற்கரையில் கடந்த 7 நாட்களாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் சில விஷமிகள் புகுந்ததால் வன்முறை வெறியாட்டமாக மாறியது.
மெரீனாவில் அமர்ந்திருந்தவர்கள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர். மெரீனாவிற்கு வரும் அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டன. இதனையடுத்து சென்னையில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.
திருவல்லிக்கேணியில் உள்ள ஐஸ்ஹவுஸ் காவல்நிலையம் தீவைக்கப்பட்டது. சென்னை மயிலாப்பூரில் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. மயிலாப்பூர் டி.வி. கோயில் தெருவில் உள்ள போலீஸ் அடித்து நொறுக்கப்பட்டது. மேலும் காவல்துறை பேருந்து, வேன் ஆகியவற்றை தீயில் எரிந்து சாம்பலாகின.
கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீஸ் நடத்திய தடியடியில் மாணவர்கள் பலர் காயமடைந்தனர். தடியடியைக் கண்டித்து பல பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது கலவரக்காரர்கள் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமான போலீசார் காயமடைந்தனர். மாநகர பேருந்துகள் சேதமடைந்தன. இதனால் சென்னை மெரீனா கடற்கரை உள்ளிட்ட பகுதிகள் போர்க்களமாக காட்சி அளித்தன.
இந்நிலையில், மெரீனா கடற்கரை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை காவல்துறையினர் தடியால் அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் ஆட்டோக்களுக்கும், குடிசைக்குள் போலீசாரே தீ வைக்கும் சம்பவங்களும் நடந்துள்ளது. இந்த வீடியோ காட்சி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதனிடையே சென்னை கலவரம் பற்றி இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய காவல்துறை ஆணையர் ஜார்ஜ், மாணவர்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாலேயே கல்வீச்சு, கலவரம் நடைபெற்றதாக கூறினார். தற்போது நிலைமை கட்டுக்குள் வந்து விட்டதாக கூறிய ஜார்ஜ், வாகனங்களுக்கு போலீசார் தீ வைத்ததாக வெளியான வீடியோ குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார். போலீசார் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படும் வீடியோக்களை இதுவரை பார்க்கவில்லை என்றும் ஒருவேளை அது மார்பிங் செய்யப்பட்டதாக இருக்கலாம் என்றும் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
நன்றி : ஒன்இந்தியா.காம்