சென்னை, மதுரையைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் போராட்டம் வாபஸ் !
சென்னை, மதுரையில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் புதுவையில் 7 நாட்களாக நடந்து வந்த போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும் பீட்டாவை இந்தியாவில் தடைசெய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடும் குளிர் மற்றும் பனியில் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து அறவழியில் நடத்தி வந்தனர்.
போராட்டத்தின் எதிரொலியாக ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டத்தை பிறப்பித்தது தமிழக அரசு . ஆனால் நிரந்தர சட்டம் வேண்டும் எனக் கூறி அதனை ஏற்க மறுத்து பல இடங்களில் நேற்றும் போராட்டங்கள் தொடர்ந்தன. இதற்கிடையே தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது போலீசார் நேற்று சரமாரி தடியடி நடத்தினர். இதையடுத்து பல இடங்களில் போராட்டம் கைவிடப்பட்டது.
மேலும் நேற்று மாலையில் நடந்த சிறப்பு சட்டசபைக் கூட்டத்தில் உறுப்பினர்களின் ஆதரவுடன் அவசர சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில் ஜல்லிக்கட்டை நிரந்தரமாக நடத்த வேண்டும், பீட்டாவுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி ஏஎப்டி மைதானத்தில் நேற்றும் மாணவ, மாணவியர், இளைஞர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதற்கிடையில் சென்னை, மதுரையில் நடைபெற்று வந்த போராட்டங்கள் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து புதுவையில் கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
புதுச்சேரியில் இளைஞர்கள், மாணவர்கள் நடத்தி வந்த போராட்டம் அமைதியாக நடந்து முடிந்துள்ளது என முதல்வர் நாராயணசாமி தெரிவி்ததுள்ளார். மேலும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்த மாணவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
நன்றி : ஒன்இந்தியா.காம்