ஜல்லிக்கட்டு போராட்டம் வாபஸ்.. தென் மாவட்டங்களுக்கு மீண்டும் துவங்கியது ரயில் சேவை!
ஜல்லிக்கட்டு போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் இன்று முதல் தென் மாவட்டங்களுக்கு வழக்கம்போல் மீண்டும் விரைவு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும், பீட்டா அமைப்புக்கு தடைவிதிக்கக்கோரியும் கடந்த ஒரு வார காலமாக தமிழகம் முழுவதும் தீவிரப் போராட்டங்கள் நடந்து வந்தன. இதன் ஒரு பகுதியாக காரைக்காலிருந்து – பெங்களூர் சென்ற பயணிகள் ரயிலை கடந்த 19ந் தேதி சேலத்தில் 7,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர். இதனால் அந்த மார்க்கத்தில் ரயில் சேவை முற்றிலும் தடைபட்டது.
இதேபோல் மதுரை செல்லூர் ரயில் பாலத்தில் திரண்டிருந்த மாணவர்கள் கோவையிலிருந்து நாகர்கோவில் சென்ற பயணிகள் ரயிலை நடுவழியில் மறித்து தடுத்து நிறுத்தினர். மாணவர்களிடம் போலீசார் நடத்திய தொடர் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் அந்த ரயில் தொடர்ந்து 5 நாட்களாக அதே இடத்திலே நின்று கொண்டிருந்தது.
இதனால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் கன்னியாகுமரி, முத்துநகர், நெல்லை, பொதிகை உட்பட பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்ட களத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என போராட்டக்காரர்கள் கூறியதால் தொடர்ந்து 5வது நாளாக விரைவு ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. சுமார் 150க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையே, இன்று மாலை 6.30 மணி அளவில் ஜல்லிக்கட்டு போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் இன்று இரவு முதல் வழக்கம்போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்கள் செல்லும் வழித்தடம் எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை எனவும் அந்தந்த வழித்தடங்களிலே ரயில்கள் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதேபோல், தென்மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூர் வரும் விரைவு ரயில்களின் சேவையும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
நன்றி : ஒன்இந்தியா.காம்