மக்களுக்கு பெரும் தலைவலியாக மாறிய திருத்தப்பட்ட வருமான வரிச் சட்டம்!
பிரதமர் மோடியின் பண ஒழிப்பு நடவடிக்கை கிளப்பிய புழுதி இப்போதுதான் மெல்ல அடங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் மக்கள் வருமான வரித்துறையின் கோரப்பிடியில் சிக்க ஆரம்பித்துள்ளனர்.
மக்கள் கஷ்டப்பட்டு சேர்த்த பணம், மகள் திருமணத்துக்கு சேர்த்த சேமிப்பு, சிறு வியாபாரிகள் தங்கள் வணிகத்துக்குப் பெற்ற சிறு முதல், பரிசாகப் பெற்ற பணம், அவ்வளவு ஏன்… சாதாரணமாக வீட்டுச் செலவுக்கென வைத்திருக்கும் பணத்துக்குக் கூட கணக்குக் கேட்க ஆரம்பித்துவிட்டது வருமான வரித்துறை.
இந்த வருமானத்துக்கான ஆதாரத்தை சரியாகக் காட்டாவிட்டால், அதில் 83 சதவீதத்தை அபராதமாகப் பிடித்துக் கொள்ளப் போகிறது வருமான வரித்துறை. அது எத்தனை கஷ்டப்பட்டு சேர்த்த சேமிப்பாக இருந்தாலும் அவர்களுக்குக் கவலையில்லை.
‘கருப்புப் பணத்தை வெளியில் கொண்டுவருவதற்கான கடுமையான சட்டம் இது. ஆனால் இதை வருமான வரித்துறை அதிகாரிகளே கூட தவறாகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. இதுகுறித்து எங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டுதான் இருக்கிறார்,’ என்கிறார் மும்பையைச் சேர்ந்த ஒரு வருமான வரி அலுவலர்.
‘நல்ல முறையில், நாணயமாகப் பணம் சேர்த்தவர்கள், முதலீட்டாளர்கள் இந்த கடுமையான சட்டத்தால் பாதிக்கும் ஆபத்து உள்ளது,’ என்கிறார் ஒரு தணிக்கை அலுவலகத்தில் பணியாற்றும் அமித் மகேஸ்வரி.
வருமான வரிச் சட்டம் 68 (ஆதாரமில்லாமல் வந்த முதலீட்டுத் தொகை, கடன், பரிசுகள் ), 69A (ஆதாரம் சொல்ல முடியாத பணம், நகை), 69 B (விளக்கம் சொல்ல முடியாத முதலீடு), 69C (காரணம் சொல்ல முடியாத செலவுகள்) போன்றவை நடுத்தர மக்களை பெரும் சிரமத்துக்கு உள்ளாக்கக் கூடும். 115 BBE படி, ஒருவர் தனது காரணம் சொல்ல முடியாத வருவாய் ஆதாரங்களை வைத்து, நட்டத்தை ஈடுகட்டி கணக்கில் காட்ட முடியாது.
முன்பெல்லாம், கணக்கில் வராத பணம் அல்லது முதலீடு இருந்தால் அதற்கு 30 சதவீத வரி மற்றும் உப வரி விதிப்பார்கள். இப்போது திருத்தப்பட்ட 115 BBE சட்டப்படி 60 சதவீத வரி, 15 சதவீத உப வரி, 3 சதவீத செஸ், அபராதம் 10 சதவீதம் என மொத்தம் 83.25 சதவீதம் வரியாகவே பிடித்தம் செய்யும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பெரும் பணக்காரர்களை விட, நடுத்தர, உயர் நடுத்தர மக்கள், சிறு வியாபாரிகள் போன்றவர்களே அதிகம் பாதிக்கப்பட உள்ளனர்.
நன்றி : ஒன்இந்தியா.காம்