ஜல்லிக்கட்டு அறிவிக்கையை வாபஸ் பெற மத்திய அரசு முடிவு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு தாக்கல்
மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு அதிகாரத்தில் இருந்தபோது, காட்சிப் படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் காளைகளை சேர்த்து 2011-ம் ஆண்டு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை போட்டது. இதன் காரணமாக 2015-ம் ஆண்டு, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற ஏதுவாக நிபந்தனை களுடன்கூடிய அனுமதியை மத்திய அரசு வழங்கியது. ஆனால் இந்த அறிவிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பை ஒத்திவைத்தது.
அவசர சட்டம்
இதற்கிடையே இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தியே ஆக வேண்டும் என்ற வகையில், தமிழ்நாட்டில் பெரும் போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து மத்திய அரசுடன் ஆலோசித்து, தமிழக அரசு ஒரு அவசர சட்டத்தை இயற்றியது.
ஆனாலும் அந்த அவசர சட்டத்துக்கு எதிராக பீட்டா போன்ற அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டை நாடி, இடைக்கால தடை உத்தரவு எதுவும் பெற்றுவிடக்கூடாது என்று கருதி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த சனிக்கிழமை ஒரு கேவியட் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், “ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு எதிராக ஏதாவது வழக்குகள் வந்தால், தமிழக அரசின் கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது” என கோரப்பட்டுள்ளது. இது போன்று சுப்ரீம் கோர்ட்டில் 70 கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நிரந்தர சட்டம்
மேலும், ஜல்லிக்கட்டுக்காக பிறப்பித்த அவசர சட்டத்துக்கு மாற்றாக தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) நிரந்தர சட்ட மசோதா கொண்டு வந்தார்.
‘மிருகவதை தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்ட மசோதா, 2017’ என்று பெயரிடப்பட்ட அந்த மசோதா, குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது. அது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அறிவிப்பு
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி நேற்று ஆஜரானார்.
அவர், “ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக சட்டசபை சட்டம் இயற்றி விட்டதை கருத்தில் கொண்டு, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு ஜனவரி 6-ந் தேதி பிறப்பித்த அறிவிக்கையை வாபஸ் பெற மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது” என குறிப்பிட்டார். அதற்கு நீதிபதிகள், “இதுபற்றி முறையாக மனு தாக்கல் செய்கிறபோது, சம்பந்தப்பட்ட நீதிபதிகளின் அமர்வு முடிவு எடுக்கும்” என குறிப்பிட்டனர்.
தடை முழுவதுமாக நீக்கம்
இதையடுத்து, ஜல்லிக்கட்டு வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோகின்டன் பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னிலையில் மத்திய அரசு இன்று (புதன்கிழமை) மனு தாக்கல் செய்யும் என தகவல்கள் கூறுகின்றன.
இதன்மூலம் ஜல்லிக்கட்டு மீதான தடை முழுவதுமாக நீக்கப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினத்தந்தி