ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் வன்முறை தீ வைப்பு-பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதாக சென்னையில் 170 பேர் கைது
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 6 நாட்கள் அறவழிப் போராட்டம் நடத்தினார்கள்.
இந்த போராட்டத்துக்கு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு ஆதரவு தெரிவித்தனர்.
வன்முறை
நேற்று முன்தினம் மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களை போலீசார் வெளியேற்றினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை முழுவதும் 132 இடங்களில் மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
அமைதியாக நடந்த இந்த போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் பல இடங்களில் கலவரம் வெடித்தது.
போலீஸ் நிலையம் எரிப்பு
சென்னை நகர் முழுக்க 51 இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. 64 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. திருவல்லிக்கேணி, ஐஸ்அவுஸ், ராயப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தீ வைப்பு சம்பவங்கள் பெரிய அளவில் நடந்தன.
ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையம் பெட்ரோல் குண்டுவீசி தீ வைத்து கொளுத்தப்பட்டது. மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகே போலீஸ் பூத் ஒன்றும் தீ வைத்து எரிக்கப்பட்டது. மெரினா நடுக்குப்பத்தில் நடந்த கலவரத்தில் மீன் மார்க்கெட், குடிசைகள் தீ வைத்து நாசப்படுத்தப்பட்டன. காரும் கொளுத்தப்பட்டது.
இணை கமிஷனர் கார் எரிப்பு
திருவல்லிக்கேணி பாரதி சாலையிலும் கார் ஒன்று எரிக்கப்பட்டது. அரும்பாக்கம், வடபழனி மற்றும் எம்.கே.பி.நகர், வியாசர்பாடி பகுதியிலும் போலீஸ் வாகனங்களும், தீயணைப்பு துறை வாகனங்களும் எரிக்கப்பட்டன.
தாசப்பிரகாஷ் பகுதியில் இணை கமிஷனர் சந்தோஷ் குமாரின் கார் தீ வைத்து எரிக்கப்பட்டது. கலவரக் காரர்கள் தாக்குதலில் இருந்து தப்பிய அவர் மாநகர பஸ்சில் ஏறிச்சென்றார். அவரது கார் டிரைவர் போலீஸ் ஏட்டு செந்தில்குமார் கலவரக்காரர்களால் தாக்கப்பட்டார்.
170 பேர் கைது
மேற்கண்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். அதன்பேரில் வன்முறையாளர்கள் மீது 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வடசென்னையில் 7 வழக்குகள் பதிவானது. வடசென்னையில் பதிவான 7 வழக்குகள் தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
தென்சென்னை பகுதியில் நடந்த கலவரம், வன்முறை சம்பவங்கள் தொடர்பாக சுமார் 130 பேர் கைது ஆனதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மொத்தத்தில் நேற்று முன்தினம் நடந்த தீவைப்பு, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது தொடர்பாக 170 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணை கமிஷனர் சந்தோஷ்குமாரின் காரை எரித்த வழக்கில் எழும்பூர் போலீசார் ஒரு அமைப்பைச் சேர்ந்த 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை. மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகே போலீஸ் பூத் எரிக்கப்பட்ட வழக்கில் 27 பேர் கைதானார்கள்.
போலீஸ் நிலைய எரிப்பில் 8 பேர் கைது
ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்ட வழக்கில் 8 பேரும், நடுக்குப்பத்தில் நடந்த கலவரம் தொடர்பாக சினிமா புதுமுக இயக்குனர் ஒருவர் உள்பட 30 பேரும் கைதானதாக தெரிவிக்கப்பட்டது.
வடபழனியில் நடந்த கலவரம் தொடர்பாக 8 பேர் கைதானார்கள். வேளச்சேரியில் வன்முறையில் ஈடுபட்டதாக 11 பேர் பிடிபட்டனர். வேப்பேரி உள்ளிட்ட 4 இடங்களில் டாஸ்மாக் கடைகள் தாக்கப்பட்டு சூறையாடப்பட்டது. அந்த சம்பவங்களில் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
62 பஸ்கள் உடைக்கப்பட்டன. அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளையும் அடையாளம் கண்டு கைது செய்யும் பணி நடந்து வருகிறது.
கண்காணிப்பு கேமரா
பல்வேறு சம்பவங்களில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைது வேட்டை தொடர்வதாகவும் போலீசார் கூறினார்கள்.
நன்றி : தினத்தந்தி