ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது தடியடி தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ்
சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது நடைபெற்ற தடியடி சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தாமாகவே முன்வந்து, தமிழக அரசின் தலைமை செயலாளர், டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் நடைபெற்ற தடியடி சம்பவங்கள் குறித்து ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை ஆணையம் கவனமாக பார்த்ததில், எவ்வித தூண்டுதலும் இன்றி போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளது.
போலீசார் தீவைத்தனர்
தமிழக மக்கள், குறிப்பாக சென்னையை சேர்ந்தவர்கள் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குவது தொடர்பாக மிகவும் அமைதியான போராட்டத்தை ஒரு வாரத்துக்கும் மேலாக மேற்கொண்டு வந்தார்கள். மெரினா கடற்கரையில் போராட்டக்காரர்களை பாதுகாக்க வேண்டியவர்களே அவர்களுடைய அடிப்படை உரிமையை பறிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளனர்.
சென்னையில் பல தெருக்களில் குடிசைகள், ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள், தெருவோரம் அமைந்த காய்கறி கடைகள் மற்றும் இதர சொத்துகள் மீது போலீசாரே தீயிட்டுக்கொளுத்தியதை தொலைக்காட்சிகளில் தெளிவாக காணமுடிந்தது. மாணவர்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றிக்கொள்ள ரத்தம் சொட்டச்சொட்ட அலறி அடித்துக் கொண்டு ஓடுவதையும் காணமுடிந்தது.
பதில் அளிக்க வேண்டும்
போலீசார் பல வீடுகளில் அத்துமீறி நுழைந்து பலரையும் கடுமையாக தாக்கி இருக்கின்றனர். சென்னை நகரம் மற்றும் மெரினா கடற்கரைக்கு செல்லும் சாலைகளை போலீசார் போக்குவரத்துக்கு தடை விதித்து இதுபோன்று அத்துமீறல்களில் ஈடுபட்டனர்.
எனவே, தமிழக தலைமை செயலாளர், டி.ஜி.பி. மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோர் மேற்கண்ட சம்பவம் குறித்து இரு வாரங்களுக்குள் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு விரிவான அறிக்கையை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாநில ஆணையம் விசாரணை
அதேபோல தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி மீனாகுமாரி, தாமாக முன்வந்து ஒரு வழக்கு பதிவு செய்தார். மெரினா கடற்கரையில் நடந்த தடியடி சம்பவம் குறித்து அனைத்து விவரங்களுடன் 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று டி.ஜி.பி.க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இந்த கலவரம் குறித்து தனியாக விசாரணை நடத்தி அறிக்கை தருவதற்காக, மாநில மனித உரிமை ஆணையத்தின் பதிவாளர் மாவட்ட நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, உதவி பதிவாளர் பி.சி.கோபிநாத் மற்றும் மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அம்ரேஸ் பூஜாரி ஆகியோரை கொண்ட ஒரு துணை குழுவை அமைத்தும் உத்தரவிட்டார்.
இந்த துணை குழு நேற்று மெரினா கடற்கரையில் தடியடி சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கியது.
நன்றி : தினத்தந்தி