பொன்.ராதாகிருஷ்ணனுடன் நடிகர் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு
பரபரப்பான அரசில் சூழலில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை நடிகர் கமல்ஹாசன் இன்று சந்தித்து பேசினார்.
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்து தமிழகம் முழுவதும் ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் முன்னெடுத்து நடத்தினர். இதனால் கடந்த ஒரு வாரகாலமாக தமிழகமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு ஆங்காங்கே அறவழி போராட்டங்கள் நடந்தது.
மாணவர்கள், இளைஞர்கள், குழந்தைகள், பெண்கள் என அனைத்து தரப்பட்ட மக்களும் தாமாக முன்வந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், திரையுலகினர், வணிகர்கள் உள்பட அனைவரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து ஜல்லிக்கட்டு அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனால் பல இடங்களில் ஒரு வாரகாலமாக நடந்து வந்த போராட்டம் நேற்று முடிவுக்கு வந்தது. மெரீனாவில் மட்டும் ஒரு பிரிவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டம் தொடங்கிய நாள் முதல் நடிகர் கமல்ஹாசன் டுவிட்டர் மூலம் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வந்தார். போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் குரல் எழுப்பி வந்தார். இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்தும் ஜல்லிக்கட்டு, மாணவர்கள் போராட்டம், போலீஸ் தடியடி, பீட்டா அமைப்பு குறித்தும் பல்வேறு கருத்துக்களை கூறியிருந்தார்.
இந்தநிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை இன்று மாலை கமல்ஹாசன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தற்போதைய தமிழக அரசியல் சூழல் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
நன்றி : ஒன்இந்தியா.காம்