சென்னை போராட்டத்தில் வன்முறை வெடித்தது எப்படி? கூடுதல் கமிஷனர் சேஷசாயி பரபரப்பு பேட்டி
சென்னையில் மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அமைதியாக நடத்திய போராட்டத்தில் 7 சமூக விரோத அமைப்புகள் புகுந்து வன்முறை வெடிக்க வைத்தனர் என்று கூடுதல் கமிஷனர் சேஷசாயி பரபரப்பு பேட்டி கொடுத்தார்.
சென்னை நகர தலைமையக கூடுதல் கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர்கள் பாலகிருஷ்ணன், சுதாகர் ஆகியோர் நேற்று மாலை கமிஷனர் அலுவலகத்தில் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது கூடுதல் கமிஷனர் சேஷசாயி கூறியதாவது:–
மெரினாவில் 6 நாட்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்களும், இளைஞர்களும் அமைதியான முறையில் அறவழியில் போராட்டம் நடத்தினார்கள். அவர்களுடைய போராட்டத்துக்கு போலீசார் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். போலீசாருக்கு அவர்களும் ஒத்துழைப்பு கொடுத்தனர்.
மெரினாவில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியபோதுகூட ஒருசிறு அசம்பாவிதம் கூட நடக்கவில்லை. மாணவர்களே போக்குவரத்தை சீர்செய்தார்கள். 6 நாட்களாக நடந்த போராட்டத்தில் அசம்பாவிதங்கள் நடந்ததாக ஒரு புகார் கூட இல்லை.
திசை மாறியது
போராட்டம் நடத்தப்பட்ட 6 நாட்களும் தினமும் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கை குறித்து விளக்கி கூறிவந்தார். முதல்–அமைச்சர் டெல்லி சென்றது, பிரதமரை சந்தித்து பேசியது, அதன்பிறகு அவசர சட்டம் கொண்டு வந்தது போன்ற அரசின் செயல்பாடுகள் பற்றி போராட்டம் நடத்தியவர்களிடம் விளக்கிக் கூறப்பட்டது.
ஆனால், போராட்ட களம் சிறிது சிறிதாக திசை மாறி போக ஆரம்பித்தது. 7 சமூக விரோத அமைப்புகள் மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய அமைதியான அறவழிப் போராட்டத்தில் புகுந்து கலகம் செய்ய ஆரம்பித்தார்கள். உண்மையிலேயே போராட்டம் நடத்தியவர்கள் ஜல்லிக்கட்டு பற்றி மட்டுமே பேசினார்கள்.
ஆனால் மாணவர்கள் போர்வையில் போராட்ட களத்தில் புகுந்தவர்கள் ஜல்லிக்கட்டு பற்றி பேசாமல், தலைவர்கள் பற்றி தரக்குறைவாக பேச ஆரம்பித்தார்கள். ஜல்லிக்கட்டை நடத்துவது அவர்கள் நோக்கமல்ல. அரசை செயல்படவிடாமல் தடுப்பதுதான் அவர்களது நோக்கமாக இருந்தது.
வீடியோ ஆதாரம்
போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டார்கள் என்பதை வீடியோ படமாக எடுத்து மாணவர்களே எங்களிடம் கொடுத்துள்ளனர். அதன்பிறகுதான் போலீஸ் தரப்பில் உஷார் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. 23–ந்தேதி அன்று காலை 6 மணியளவில் மெரினாவில் போராட்டம் நடத்தியவர்களை அமைதியான வழியில் கலைந்து செல்வதற்கு நாங்கள் நடவடிக்கைகள் எடுத்தோம்.
அப்போது 6 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்களிடம் லத்தி கொடுக்கப்படவில்லை. யாரும் துப்பாக்கியும் வைத்திருக்கவில்லை. அறவழியில் போராடியவர்களை எந்தவித அதிகார துஷ்பிரயோகம் செய்யாமல், ஆயுதங்கள் பயன்படுத்தாமல் அறவழி நடவடிக்கைகள் மூலம் கலைந்து செல்ல நடவடிக்கை எடுத்தோம். இதற்கான வீடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது.
3 ஆயிரம் பேர் கலைந்தனர்
எங்களது அறவழி நடவடிக்கை தொடங்கியபோது மெரினாவில் 5 ஆயிரம் பேர் கூடியிருந்தனர். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டமே போதுமானது. அந்த அவசர சட்டம் சட்டசபையில் சட்டமாக்கப்படும் என்று அவர்களிடம் எடுத்துக் கூறப்பட்டது.
அந்த விளக்கத்தை ஏற்று சுமார் 3 ஆயிரம் பேர் அவர்களாகவே மெதுவாக கலைந்து சென்றுவிட்டனர். காலை 8.30 மணிக்குள் 3 ஆயிரம் பேரும் கலைந்து சென்றுவிட்டனர்.
அதன்பிறகு அங்கு கூடியிருந்தவர்கள் கடல் பகுதியை நோக்கி செல்ல ஆரம்பித்தனர். அவர்களை நாங்கள் துரத்தவில்லை, விரட்டியடிக்கவில்லை. அந்த சமயத்தில் மீனவர்கள் குப்பத்தில் இருந்து ஏராளமான ஆண்களும், பெண்களும் திரண்டு வந்து கடல் பகுதியில் இருந்தவர்களோடு கலந்துவிட்டனர். மீனவர்கள் குப்பத்திலிருந்து வந்தவர்கள்தான் கடல் பகுதியிலிருந்த போராட்டக்காரர்களை கலைந்து செல்லவிடாமல் தடுத்தனர்.
வதந்தி
மீனவர்கள் குப்பத்திலிருந்து வந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை போலீசார் தாக்கிவிட்டதாக வதந்தியை பரப்பினார்கள். இந்தநேரத்தில், ஒருசில தொலைக்காட்சிகளில் மெரினாவில் அமைதியாக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திவிட்டனர் என்று தவறான செய்தியை பரப்பினார்கள்.
இதனால், வெளியிலிருந்து இளைஞர்களும், மாணவர்களும் மெரினாவை நோக்கி வர ஆரம்பித்தனர். அவர்களோடு சமூக விரோதிகளும் மெரினாவுக்குள் ஊடுருவ முயன்றனர். மெரினாவில் தடியடி நடத்தப்படவே இல்லை. அங்கு ஏராளமான பத்திரிகையாளர்கள் கூடியிருந்தனர். தொலைக்காட்சி கேமராக்கள் நடந்ததை படம்பிடித்தபடி இருந்தன.
தொலைக்காட்சி கேமராக்கள் படம்பிடித்த காட்சிகளில் போலீசார் மெரினாவில் தடியடி நடத்தினார்கள் என்பதை காட்டமுடியுமா? வன்முறை வெடித்ததால் காலை 10 மணிக்கு மேல்தான் போலீசாருக்கு லத்தியே கொடுக்கப்பட்டது.
பெட்ரோல் குண்டு வீச்சு
மெரினாவுக்குள் வன்முறையாளர்களை தடுப்பதற்காகவே மெரினா கடற்கரையைச் சுற்றியுள்ள ராதாகிருஷ்ணன் சாலை, அவ்வை சண்முகம் சாலை, பெசன்ட் சாலை, சுங்குவார் தெரு, பாரதி சாலை, வாலாஜா சாலை, சிவானந்தா சாலை போன்ற சாலைகள் சீல் வைக்கப்பட்டன.
வன்முறையாளர்கள் நுழைவது தடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும், இளைஞர்களும் அமைதியாக கலைந்து சென்றது சமூக விரோத கும்பலுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்கள் சீல் வைக்கப்பட்ட சாலைகளில் மறியலில் ஈடுபட்டு வன்முறையை வெடிக்க வைத்தனர். லத்தியில்லாமல் இருந்த போலீசார் மீது கற்களை வீசி தாக்கினார்கள். காலியான ‘சின்டெக்ஸ்’ குடிநீர் தொட்டிகளை கலவரக்காரர்கள் ரோடுகளில் உருட்டி விட்டனர். பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
நடுக்குப்பம், அயோத்திகுப்பம், மாட்டாங்குப்பம் போன்ற மீனவர்கள் வசிக்கும் பகுதிகளில் வன்முறையாளர்கள் புகுந்துவிட்டனர். அங்கு வசிக்கும் மக்களை ஏமாற்றி, மிரட்டி தங்கள் வசப்படுத்திக் கொண்டனர். அவர்களை கேடயமாக வைத்துக் கொண்டு போலீசார் மீது சரமாரியாக தாக்கினார்கள்.
போலீஸ் நிலையத்துக்கு தீ வைப்பு
லத்தி இல்லாததால் போலீசார் பல இடங்களில் அடி வாங்கினார்கள். போராட்டத்தை தூண்டிவிட்டு, வன்முறையை வெடிக்கச் செய்யும் நோக்கம் போலீசாருக்கு இல்லை. அப்படி ஒரு நோக்கம் இருந்திருந்தால் தலையில் ஹெல்மெட், உடம்பில் கவசஉடை, கையில் லத்தி, துப்பாக்கியோடு போலீசார் தயார் நிலையில் வந்திருப்பார்கள்.
ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்தை கொளுத்தியது யார்? என்பது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள வீடியோ காட்சி மூலம் தெளிவாக தெரியவந்தது. ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்தை பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்து கொளுத்தினார்கள். போலீஸ் நிலையத்தை வெளியில் பூட்டிவிட்டனர். இது கொடூரமான செயல் இல்லையா? போலீஸ் நிலையத்திற்குள் மாட்டிக்கொண்ட பெண் போலீசார் வயர்லெஸ் மூலம் அழுதபடியே தகவல் கொடுத்தனர்.
அதன்பிறகுதான் போலீஸ் நிலையம் கொளுத்தப்பட்ட சம்பவம் தெரிய வந்தது. உடனடியாக துணை கமிஷனர் சுதாகர் போலீஸ்படையோடு அனுப்பி வைக்கப்பட்டார். நானும் அங்கு நேரடியாக சென்றேன். போலீஸ் நிலையத்திற்குள் மாட்டிய போலீசார் மீட்கப்பட்டனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் துப்பாக்கிச்சூடு நடத்திதான் கூட்டத்தை கலைத்திருப்போம். ஆனால், அப்போதுகூட துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை. வன்முறையாளர்கள் விரட்டித்தான் அடிக்கப்பட்டனர்.
வெளியிட தயார்
இரு சம்பவங்களில் போலீசார் வாகனத்துக்கு தீ வைப்பதுபோலவும், வாகனத்தை லத்தியால் உடைப்பதுபோலவும் உள்ள ஒரு வீடியோ காட்சியை ‘வாட்ஸ்–அப்’பில் பரப்புகிறார்கள். இரு சம்பவத்தை தொலைக்காட்சிகளில் திரும்ப திரும்ப 2 ஆயிரம் முறை காட்டி போலீசார்தான் கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
பதிலுக்கு பதில் பேச வேண்டாம் என நாங்கள் நினைத்தோம். ஜல்லிக்கட்டுக்காக உண்மையாக போராடிய மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் உண்மை நிலவரம் என்ன என்பது தெரியவரும். வன்முறையாளர்கள் நடத்திய வெறியாட்டங்கள் தொடர்பான வீடியோ காட்சிகள் எங்களிடமும் உள்ளது.
ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையம் கொளுத்திய சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரமும் எங்களிடம் இருக்கிறது. இதை ‘வாட்ஸ்–அப்’பில் எங்களாலும் வெளியிட முடியும்.
ஆனால், நடந்த சம்பவம் தொடர்பாக முழு விசாரணை நடந்துவருகிறது. விசாரணை முடிந்த பிறகு உரிய ஆதாரங்களோடு வன்முறையில் ஈடுபட்டு பிரச்சினையை பெரிதாக்கிய 7 சமூக விரோத அமைப்புகளின் பெயர் விவரங்கள் வெளியிடப்படும். சில மத அமைப்புகளும் பின்னணியில் இருந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதுபற்றி விசாரணை நடத்திவருகிறோம். வெளி மாவட்டங்களிலிருந்து சமூக விரோதிகள் சென்னைக்கு வந்து திருவல்லிக்கேணி பகுதியில் ‘மேன்சன்’களில் தங்கி இருந்துள்ளனர்.
மாட்டாங்குப்பம், நடுக்குப்பம், அயோத்திகுப்பம் போன்ற பகுதிகளிலும் அவர்கள் ஊடுருவியுள்ளனர். அதுதொடர்பான ஆதாரங்களும் உள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து சமூக விரோதிகள் சென்னைக்கு வந்தார்களா? என்பதுபற்றி விசாரணை நடத்தப்படும்.
சீர்குலைக்க சதி
குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் நோக்கத்தோடுதான் ஜல்லிக்கட்டு போராட்டத்தை திசை திருப்பி இந்த சமூக விரோத அமைப்புகள் சதி திட்டம் தீட்டி செயல்படுத்தியுள்ளனர். அரசின் செயல்பாட்டை முடக்குவதற்கும் இவர்கள் திட்டம் தீட்டி செயல்பட்டிருக்கிறார்கள்.
போலீசார் வாகனங்களை சேதப்படுத்துவது போன்ற வீடியோ காட்சிகள் தொடர்பாக முழு அளவில் விசாரணை நடந்து வருகிறது. அதில் போலீசார் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : தினத்தந்தி