கஜகஸ்தானில் பேச்சுவார்த்தை: சிரியா போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல்
சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக கஜகஸ்தானில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையின்போது போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கு ரஷ்யா, ஈரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலகக் கோரி நடைபெறும் இந்தப் போராட்டத்தால் லட்சக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். மேலும் பல லட்சக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேறி பிற நாடுகளில் அகதிகளாக குடியேறி வருகின்றனர்.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. எனினும் கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி முதல் போர்நிறுத்தம் அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில், கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானா நகரில் சிரியா அரசுக்கும் அதை எதிர்த்துப் போராடும் புரட்சிப் படையினருக்கும் இடையே சமரசம் செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.
சிரியா அரசுக்கு ஆதரவாக ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளும் புரட்சிப்படையினருக்கு ஆதரவாக துருக்கியும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றன. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்த நாடுகளின் பிரதிநிதிகள் செய்தியாளர்களிடம் கூறும்போது, “சிரியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட எங்களால் முடிந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். அது மிகப்பெரிய சவாலானதாக இருக்கும்.
அவ்வளவு எளிதானதாக இருக்காது. அதேநேரம் எங்கள் முயற்சியின் மூலம் 6 ஆண்டுகால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம்” என்றனர்.
நன்றி : தி இந்து தமிழ்