சென்னை கலவரம்: வீடியோ ஆதாரம் வெளியிட்டது போலீஸ்
சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இளைஞர்கள் கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ ஆதாரத்தை, பேஸ்புக் பக்கத்தில் போலீசார் வெளியிட்டுள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டை வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். கடந்த திங்கட்கிழமையன்று, மாணவர் கூட்டத்திற்குள் ஊடுருவிய சமூக விரோதிகளால் சென்னையில் கலவரம் ஏற்பட்டது. இதில் பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன; பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. போலீசார் மற்றும் பொது மக்களுக்கு காயம் ஏற்பட்டது. இந்த கலவரத்திற்கு போலீசாரே காரணம் என ஒரு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஆதாரம்:
இந்நிலையில் சென்னை போலீசார் பேஸ்புக் பக்கத்தில் கலவரக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பான வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், கலவரக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குகின்றனர். மேலும், சாலையில் நின்று கொண்டிருந்த வேன் ஒன்றையும் அடித்து சேதப்படுத்தி கவிழ்த்து விடுகின்றனர். ஐஸ் ஹவுஸ் பகுதியில் போலீஸ் ஸ்டேசனுக்கு தீவைத்து எரிக்கின்றனர். கலவரக்காரர்கள் தாக்குதலில் போலீசார் காயமடைந்து, ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகனங்கள் மூலம் அழைத்து செல்லப்பட்ட காட்சிகள் பதிவாகியுள்ளன.
நன்றி : தினமலர்