நடுக்குப்பம் பகுதி மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: பிரகாஷ் காரத் வலியுறுத்தல்
காவல் துறையினரின் வன்முறையால் பாதிக்கப்பட்ட சென்னை நடுக்குப்பம் பகுதி மக்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் வலியுறுத்தியுள்ளார்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மீன் சந்தை மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிரகாஷ் காரத், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் அ.சவுந்தரராஜன், உ.வாசுகி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து 23-ம் தேதி நடந்தது என்ன என்பதை பிரகாஷ் காரத் கேட்டறிந்தார். காவல் துறையினரின் உடைந்த லத்திகள், உடைத்து நொறுக்கப்பட்ட பொருள்களையும் அவரிடம் பொதுமக்கள் காட்டினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பிரகாஷ் காரத் கூறியதாவது:
ஒரு வாரமாக அமைதியாக நடைபெற்ற மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காகவே காவல் துறையினர் வன்முறையில் இறங்கியுள்ளனர். நடுக்குப்பம் பகுதி மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மீன் சந்தை முழுவதுமாக எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வன்முறைச் சம்பவங்கள், காவல் துறையினர் நடத்திய தாக்குதல் குறித்து வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : தி இந்து தமிழ்