பத்மஸ்ரீ விருதை தாயாருக்கு சமர்ப்பிக்கிறேன் தமிழக உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் பேட்டி
இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் கவுரவமிக்க விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை பெறுபவர்களில் 8 பேர் விளையாட்டுத்துறையைச் சேர்ந்தவர்கள். இதில் சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள பெரியவடகம்பட்டியைச் சேர்ந்த உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பனும் ஒருவர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரியோடி ஜெனீரோ நகரில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார். இதையொட்டி தமிழக அரசு அவருக்கு ரூ.2 கோடி வழங்கியது. இவர், விபத்து காரணமாக வலது கால் ஊனமுற்றவர்.
பத்மஸ்ரீ விருது கிடைத்த தகவல் அறிந்ததும் மாரியப்பனுக்கு அவருடைய பெற்றோர், நண்பர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் 21 வயதான மாரியப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:–
தாயாருக்கு…
எனக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது பற்றி எனது பயிற்சியாளர் சத்தியநாராயணன் தெரிவித்தார். இளம் வயதில் மிக உயரிய விருது கிடைத்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த விருதால், எனது பெற்றோர், நண்பர்கள், ஊர் பொதுமக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். என்னை இந்த விருது வாங்கும் அளவிற்கு ஊக்கப்படுத்தி உயர்த்திய எனது தாயார், பயிற்சியாளர் மற்றும் அரசுக்கு மிக்க நன்றி.
இந்த பத்மஸ்ரீ விருதை தாயார் சரோஜா, பயிற்சியாளர் சத்தியநாராயணன் மற்றும் இந்தியாவிற்கு சமர்ப்பிக்கிறேன். விரைவில் நடைபெற இருக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே எனது அடுத்த லட்சியமாகும். இதற்காக நான் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். ஒவ்வொருவரும் தம்மால் முடியாது என்று நினைக்க கூடாது. முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தீபா கர்மாகர்
ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்சில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குரிய தீபா கர்மாகருக்கும் பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. அவர் கூறுகையில், ‘ விருது கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் எனது பொறுப்பு அதிகரித்துள்ளது. எல்லா போட்டிகளிலும் தேசத்திற்காக பதக்கம் வெல்ல முயற்சிப்பேன்’ என்றார்.
பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள இந்திய ஆக்கி அணியின் கேப்டனும், கோல் கீப்பருமான ஸ்ரீஜேஷ் அளித்த பேட்டியில், ‘கடந்த சில ஆண்டுகளாக எங்களது அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அணிக்கு இந்த விருதை அர்ப்பணிக்க விரும்புகிறேன். ஏனெனில் அணியின் கூட்டு முயற்சி இல்லாவிட்டால் இந்த அங்கீகாரம் எனக்கு கிடைத்திருக்காது’ என்றார்.
விராட் கோலி
டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20 ஓவர் போட்டி என்று மூன்று வடிவிலான இந்திய அணிக்கும் கேப்டனாக வலம் வரும் விராட் கோலியும் பத்ம ஸ்ரீ விருதை பெறுகிறார். கடந்த ஆண்டு டெஸ்டில் மூன்று இரட்டை சதம் விளாசிய விராட் கோலி, அணியையும் ‘நம்பர் ஒன்’ அரியணைக்கு உயர்த்தினார். அவரது வியப்புக்குரிய சாதனைகளை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. கிரிக்கெட்டில் இருந்து இந்த விருதை பெறும் 31–வது நபர் கோலி ஆவார்.
பார்வையற்றோருக்கான 20 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றுத்தந்த இந்திய கேப்டன் சேகர் நாயக், 2014–ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றவரும், ஒலிம்பிக்கில் 4 முறை பங்கேற்றவருமான வட்டு எறிதல் வீரர் விகாஸ் கவுடா, ரியோ பாரா ஒலிம்பிக்கில் குண்டு எறிதலில் வெள்ளிப்பதக்கத்தை ருசித்த 46 வயதான தீபா மாலிக், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கம் கைப்பற்றிய முதல் இந்திய மங்கை என்ற சரித்திர சாதனையை நிகழ்த்திய சாக்ஷி மாலிக் ஆகியோரையும் பத்மஸ்ரீ விருது அலங்கரிக்கிறது.
நன்றி : தினத்தந்தி