மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கருத்து
நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் செலவு குறையும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பேசினார். அப்போது அவர், “மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் செலவு குறையும். மேலும் தேர்தல் நடத்துவதால் ஏற்படும் சிரமங்கள் குறையும். இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்கு அரசியல் கட்சிகளை ஒரே மேடையில் கொண்டு வருவதற்கான முயற்சி யில் தேர்தல் ஆணையம் ஈடுபட வேண்டும். இந்த யோசனை சாத்தியமாக இருந்து, அதை அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொண் டால் அது தேர்தல் ஆணையத்துக்கு உதவியாக இருக்கும்” என்றார்.
இதற்குமுன் இந்த யோச னைக்கு பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு சட்டம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த 2015 டிசம்பரில் ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கருத்துகளை மத்திய அரசு கோரியது.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்து வதற்கு சுமார் ரூ.10 ஆயிரம் கோடி தேவை என தேர்தல் ஆணை யம் கூறியது. மேலும் பாதுகாப்பு படையினரும், வாக்குப் பதிவு இயந்திரங்களும் கூடுதலாக தேவைப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையம் கூறியது. இத்துடன் இதற்கு அரசியல் சட்டத் திருத்தம் தேவை எனவும் சுட்டிக்காட்டியது.
நன்றி : தி இந்து தமிழ்