மோடி போடும் தமிழக அரசியல் கணக்குகள்: தீவிர அரசியலுக்கு தயாராகும் நடிகர் ரஜினி
தமிழகத்தில் இன்னும் ஓராண்டுக்குள் சட்டசபைத் தேர்தலை கொண்டு வர வேண்டும் என, பிரதமர் மோடி விருப்பப்படுவதாக, டில்லி அரசியல் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. இதற்காக, மிக விரைவில், நடிகர் ரஜினியை பா.ஜ., பக்கம் கொண்டு வர வேண்டும் என மோடி விருப்பபடுவதோடு, அதற்கான காரியங்களை தொடங்குமாறு, தனக்கு நெருக்கமான சிலருக்கு உத்தரவிட்டிருப்பதாவும் கூறப்படுகிறது.
தலைவர்களுக்கு பஞ்சம்:
அவ்வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின், அரசியலில் மிகப் பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. தி.மு.க.,வின் மூத்த தலைவரான கருணாநிதியும் உடல் நலம் குன்றி, தன் அரசியல் செயல்பாடுகளை முழுமையாக குறைத்துக் கொண்டு விட்டார். இதனால், தமிழக அரசியலில் தலைவர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான், ஆளுமையுடன் கட்சியை தனிப் பெரும் சக்தியாக வளர்த்து வைத்திருந்த ஜெயலலிதாவின் இடத்தில், அவர் கூடவே இருந்தார் என்ற ஒரே காரணத்தை மட்டும் சொல்லி, அவரது தோழி சசிகலா வந்து உட்கார்ந்திருக்கிறார். அடுத்தகட்டமாக, ஜெயலலிதா வகித்த முதல்வர் பதவியையும் பிடிக்க அவர் தவிர்க்கிறார்.
வெற்றிடம்:
இந்த சூழ்நிலையில், எப்படியாவது, தமிழகத்தில் பா.ஜ.,வை, பெரும் கட்சியாக்கி, ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று மோடி விரும்புகிறார். ஆனால், அதை செயல்படுத்துவதற்குரிய ஆளுமைகள் நிறைந்த தலைவர்கள் யாரும் தமிழக பா.ஜ.,வில் இல்லாதது, மோடிக்கு கடும் அதிருப்தியாக உள்ளது. இருக்கும் ஒரு சில தலைவர்களும் கோஷ்டி கோஷ்டியாக பிரிந்து நின்று, தமிழகத்தில் பா.ஜ.,வை வளர விட்டுவிடுவோமா என்று கங்கணம் கட்டி செயல்படுவது தெரிந்தும், அவர்களையும் விட்டுக் கொடுக்க முடியாமலும்; விரட்டி அடிக்க முடியாமலும் கடுமையான தடுமாற்றத்தில் உள்ளார் மோடி.
தீவிரம்:
இருந்தாலும், தமிழகத்தில் பா.ஜ., ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதற்காக, சமீபத்தில் கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவிடம் பேசிய மோடி, நடிகர் ரஜினியை எப்படியாவது பா.ஜ., பக்கம் கொண்டு வர வேண்டும். அவரையே, பா.ஜ., சார்பிலான முதல்வர் வேட்பாளராக அறிவித்து, சட்டசபை தேர்தலை வலுவாக சந்திக்க வேண்டும். அப்படி செய்யும்பட்சத்தில் எப்படியும், தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி வந்துவிடும். கட்சியும் தமிழகத்தில் பலம் பெற்று விடும் என கூறியுள்ளார். ‛அதற்கான காரியங்களை நீங்கள் ஒரு பக்கம் செய்யுங்கள்; நானும் செய்கிறேன்’ எனவும் கூறியுள்ளார். இருவரும், அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
உறுதியுடன்…
இதையடுத்து, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும்; பா.ஜ., ஆதரவு பத்திரிகையாளர் ஒருவருக்கும் சிறப்பு அசைன்மெண்ட்கள் கொடுக்கப்பட்டு, அவர்கள் இருவரும் ரகசியமாக இரண்டு தடவைகளுக்கு மேல் ரஜினியை சந்தித்து பேசியுள்ளனர். தான் நடித்து வெளியாக இருக்கும் 2.0 படத்தில் தற்போது தான் பிசியாக இருப்பதாக கூறியுள்ள ரஜினி, படம் முடிந்து வெளியானதும், தீவிர அரசியல் குறித்து பரிசீலிக்கிறேன். அதுவரை, அதற்கான களத்தை ஏற்படுத்தலாம் என கூறியுள்ளதாகவும், மோடியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஒவ்வொரு முறையும் தன்னுடைய படம் ரிலீசாகும் சமயத்தில் எல்லாம், ரஜினி, தீவிர அரசியல் பேசுவார். பின், படம் ரிலீசானதும், யாரைப் பற்றியும் கவலைப்படாமல், இமய மலைக்கு சென்று விடுவார். அப்படியொரு நிகழ்வாக தற்போதைய முயற்சிகளும் இருந்து விடக் கூடாது என்பதில், பா.ஜ., தலைவர்கள் உறுதியுடன் இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. அதற்கேற்ற வகையிலேயே ரஜினி மற்றும் அவரது நண்பர்களிடம் பேசி, உறுதி செய்துள்ளனர். இந்த முயற்சிகள் நல்ல விதமாக சென்றால், மிக விரைவிலேயே டில்லிக்கு வர வழைத்து, ரஜினியை, பிரதமர் மோடியை சந்திக்க வைக்கவும் முயற்சிகள் எடுக்கப்படும் என்றும், பொன்.ராதாகிருஷ்ணன் தரப்பினர் கூறுகின்றனர்.
இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.
நன்றி : தினமலர்