ஜல்லிக்கட்டு வன்முறையை விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரன் நியமனம்
ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பான விசாரணை ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரன் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த சட்டம் கொண்டு வர வலியுறுத்தி ஒருவார காலம் நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. சமூக விரோதிகள் போராட்டத்திற்குள் ஊடுருவியதாக அரசு தரப்பில் கூறப்பட்டு வந்த நிலையில், இதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.
எனவே, ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டி நடத்தப்பட்ட போராட்டங்களின் தொடர்ச்சியாக 23.1.2017 அன்று சென்னை, மதுரை, கோவை மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளின் உரிய காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளை விசாரிப்பதற்கு தனி விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் இவ்விசாரணையை மேற்கொள்வார் என்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் அறிவித்தார்.
அதன்படி, ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பான விசாரணை ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரன் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், சென்னை மெரினா, கோவை மற்றும் மதுரையில் நடந்த வன்முறை மற்றும் போலீஸ் அத்துமீறல் குறித்து விசாரணை நடத்துவார்.
இந்த ஆணையமானது, 23.1.2017 அன்று நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு மூலமாக இருந்த காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளை கண்டறியவும் அதனால் பொது மற்றும் தனியாரின் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதாரங்கள் குறித்து விசாரிக்கும்.
சம்பந்தப்பட்ட காவல் துறையினரால் உரிய அளவில் பலப்பிரயோகம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பயன்படுத்தப்பட்டனவா என்பது குறித்து விசாரிக்கும். மேலும், காவல் துறையினரின் செயல்பாட்டில் அத்துமீறல் இருந்ததா என்பதை விசாரிக்கவும்; அவ்வாறெனில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்கும். இனி வரும் காலத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகளை தடுப்பதற்கான வழிமுறைகளை பரிந்துரை செய்யும்.
இவ்விசாரணை ஆணையம் தனது விசாரணையை முடித்து அரசிற்கு மூன்று மாத காலத்திற்குள் அறிக்கை சமர்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.