ஆஸ்திரேலிய பிரதமரிடம் போனில் டிரம்ப் ஆவேசம்; பாதியில் துண்டித்ததால் அதிர்ச்சி
வாஷிங்டன்: ஆஸ்திரேலிய பிரதமர், டர்ன்புல்லை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், காரசாரமாக பேசி, இணைப்பை பாதியிலேயே, துண்டித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உரையாடல்:
அமெரிக்க அதிபராக சமீபத்தில் பதவியேற்ற, டொனால்டு டிரம்ப், உலக நாடுகளின் தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். ஆஸ்திரேலிய பிரதமர், மால்கம் டர்ன்புல்லிடம், சமீபத்தில், டிரம்ப், தொலைபேசியில் பேசினார். அப்போது, பசிபிக் கடல் பயணத்தில் சிக்கி, ஆஸ்திரேலியாவிடம் தஞ்சம் புகுந்த, சிரியா உட்பட, மேற்காசிய நாட்டு அகதிகளில், 1,250 பேரை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளும், முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஒப்பந்தம் பற்றி, டர்ன்புல் நினைவூட்டினார்.
ஆவேசம்:
இதனால் ஆவேசமடைந்த டிரம்ப், ‘எந்த அகதிகளையும் ஏற்க முடியாது; அமெரிக்கா, அகதிகளின் சரணாலயம் அல்ல’ என, ஆவேசமாக, சில நிமிடங்கள் பேசி, தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்; ஆஸ்திரேலிய பிரதமர் அதிர்ச்சியில் உறைந்து போனார்.
அதுமட்டுமின்றி, இதுபற்றி, சமூகவலை தளமான டுவிட்டரிலும், டிரம்ப் கருத்துக்களை தெரிவித்துள்ளார். ‘ஆயிரக்கணக்கான அகதிகளை ஏற்றுக் கொள்வதாக, முன்னாள் அதிபர் ஒபாமா, ஆஸ்திரேலியாவுடன் ஒப்பந்தம் செய்தது மோசடி நடவடிக்கை; இதுபற்றி, நான், ஆய்வு செய்வேன்’ என கூறியுள்ளார்.