எண்ணூரில் விபத்துக்குள்ளான 2 கப்பல்கள் சிறைபிடிப்பு
சென்னை: சென்னை எண்ணூர் அருகே விபத்திற்குள்ளான இரண்டு கப்பல்களை, ஐகோர்ட் உத்தரவுப்படி இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் சிறை பிடித்தனர்.
கடந்த 28ல், இங்கிலாந்து மேன் தீவிலிருந்து, திரவ காஸ் ஏற்றிக் கொண்டு, எண்ணுார் துறைமுகம் வந்து இறக்குமதி செய்து விட்டு திரும்பிய, எம்.டி.பி., டபிள்யூ மாப்பிள் என்ற கப்பலும், மும்பையில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வந்த, டான் காஞ்சிபுரம் என்ற கப்பலும், துறைமுகத்தில் இருந்து, 1.8 நாட்டிகல் மைல் தொலைவில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில், டான் காஞ்சிபுரம் கப்பலில் துளை ஏற்பட்டு, அதிகளவில் கச்சா எண்ணெய் கசிந்தது. அதில் ஒரு பகுதி, எர்ணாவூர் பாரதியார் நகர் கடற்கரையில் ஒதுங்கியது. கடலில், 200 மீட்டர் துாரத்தில் அடர்த்தியாக, கச்சா எண்ணெய் படர்ந்தது.
இந்த நிலையில் விபத்திற்குள்ளான எம்.டி.பி.டபிள்யூ மாப்பிள் மற்றும்டான் காஞ்சிபுரம் ஆகிய கப்பல்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. பிரச்னைக்கு தீர்வு காணப்படும் வரை கப்பல் விடுவிக்கப்பட மாட்டாது எனவும், எண்ணூர் துறைமுக எல்லைக்குள் கப்பல்களை நிறுத்திவைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.