கோலியை கோபப்படுத்த வேண்டாம்: ஆஸி.க்கு மைக் ஹஸ்ஸி எச்சரிக்கை
விராட் கோலியை சற்றே கோபப்படுத்தி அவரது கவனத்தைத் திசைதிருப்பி சாதகம் அடைவோம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் கூறியிருந்ததையடுத்து மைக் ஹஸ்ஸி, கோலியைக் கோபப்படுத்த வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.
இது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா செய்தி ஊடகத்திற்கு ஹஸ்ஸி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
“நான் அவரை (கோலியை) கோபப்படுத்தி தூண்டிவிட மாட்டேன். ஏனெனில் அவருக்கு அது சாதகமாகும், அவருக்கும் அது மிகவும் பிடிக்கும் போட்டிக்கு இன்னும் தன்னை முனைப்புடன் ஈடுபடுத்திக் கொள்ள அவருக்கு இது தூண்டுகோலாக அமைந்து விடும். எனவே இத்தகைய வார்த்தைத் தாக்குதல்களில் ஆஸி. அணி ஈடுபடக்கூடாது, அது கோலியை மேலும் ஆக்ரோஷமாக்கத் தூண்டும்.
எங்களிடம் தெளிவான திட்டங்கள் உள்ளன, அதனை கண்டிப்பாகக் கடைபிடிக்கவே முயற்சி செய்வோம், களத்தில் அதிகமாக பேசி அதன் பின்னால் செல்வது நல்லதல்ல. ஏனெனில் கவனமிழப்பு ஏற்படும். இதை விட முக்கியமானது நாம் நம் திறமைகளுக்கு மதிப்பளித்து அதனை களத்தில் ஈடுபடுத்துவதே.
எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணிதான் களத்தில் தங்களது திறமைகளை பெரிய அளவில் வெளிப்படுத்தும் அணியாகும், களத்தில் நிறைய பேசி, பேச்சில் ஆக்ரோஷம் காட்டும் அணியல்ல.
ஆஸ்திரேலியப் பார்வையில் கோலிதான் முக்கியம், அவரை மலிவாக வீழ்த்த வேண்டும் என்பதே குறியாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர் செட்டில் ஆகிவிட்டாரென்றால் பெரிய அளவில் ரன்களைக் குவிப்பார்.
மேலும் கோலி இப்போது தன்னம்பிக்கையுடன் இருந்து வருகிறார், இந்திய சூழ்நிலைகளில் அவர் அதிகம் புரிதலுடையவராக இருக்கிறார். எனவே அவர் நன்றாக ஆடினால் இந்தியா வெற்றி பெறும். எனவே அவரை கோபப்படுத்தினால் அவரது கவனம் தீவிரமடைய, நம் கவனமே சிதறும்”
இவ்வாறு எச்சரித்துள்ளார் மைக் ஹஸ்ஸி.