ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தினார்கள்: ஓ பன்னீர்செல்வம்
ராஜினாமா செய்ய என்னை கட்டாயப்படுத்தினார்கள்: ஓ பன்னீர்செல்வம் பேட்டியால் பரபரப்பு
ராஜினாமா செய்ய என்னை கட்டாயப்படுத்தினார்கள்: ஓ பன்னீர்செல்வம் பேட்டியால் பரபரப்பு
நான் செய்த நற்பணிகள் சிலருக்கு எரிச்சலூட்டியது என்று முதல் அமைச்சர் ஒ பன்னீர் செல்வம் பேட்டி அளித்தார்.
முதல் அமைச்சராக நீடித்து வரும் ஓ பன்னீர் செல்வம் இன்று இரவு 9 மணி அளவில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு திடீரென வந்து அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதா நினைவிடம் முன்பு அமர்ந்து கண்மூடி மவுன அஞ்சலி செலுத்தினார். தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவும் நிலையில், ஒ பன்னீர்செல்வம் திடீரென அஞ்சலி செலுத்தியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
சுமார் 40 நிமிடத்திற்கும் மேலாக அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஜெயலலிதா நினைவிடத்தை சுற்றி வந்தார். ஓ பன்னீர் செல்வத்தின் திடீர் வருகையால் தமிழகத்தின் ஒட்டு மொத்த பார்வையும் மீண்டும் ஒருமுறை மெரினா பக்கம் திரும்பியது. அனைத்து ஊடகங்களும் நேரலையாக ஒளிபரப்பு செய்தன. பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ பன்னீர் செல்வம் தனது திடீர் தியானம் பற்றியதற்கான காரணத்தை கூறினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா ஆன்மா என்னை உந்துதல் படுத்தியது. அதன் விளைவாக நின்று கொண்டிருக்கிறேன். அம்மா அவர்களின் நோய்வாய்ப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது, ஜெயலலிதா என்னை அழைத்து மதுசூதனனை பொதுச்செயலளாராகவும் என்னை முதல் அமைச்சராகவும் இருக்குமாறு கூறினார். ஜெயலலிதா வாக்குறுதியை நிறைவேற்றவே தொடர்ந்து பதவியில் இருந்தேன். ஜல்லிக்கட்டுக்காக அவசரச் சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுத்தேன். நான் செய்த நற்பணிகள் சிலருக்கு எரிச்சலூட்டியது. எனது அமைச்சரவையில் உள்ளவரே எனக்கு எதிராக பேசியது நியாயமா?. என்னை முதல்வராக வைத்துக்கொண்டு ஏன் அவமானப்படுத்த வேண்டும்: எம்.எல்.ஏக்கள் கூட்டப்பட்டதே எனக்கு தெரியாது. ராஜினாமா செய்ய என்னை கட்டாயப்படுத்தினார்கள். கட்டாயத்தின் பேரிலேயே ராஜினாமா செய்தேன். தனியாக நான் நின்று போராடுவேன்” இவ்வாறு அவர் பேசி வருகிறார்.