அமெரிக்க வாழ் இந்தியர் மும்பையில் கைது சிலைகள், கலைப்பொருட்கள் பறிமுதல்
பழங்காலத்து சிலைகளை பதுக்கி வைத்திருந்த அமெரிக்க வாழ் இந்தியர் மும்பையில் கைது செய்யப்பட்டார்.
அவரது வீடு, குடோனில் இருந்து பழங்காலத்து சிலைகள், கலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிலைகள், கலைப்பொருட்கள் பறிமுதல்
மும்பை, கிர்காவ் பகுதியை சேர்ந்தவர் விஜய் நந்தா. இவர் அமெரிக்காவில் தொழில் அதிபராக உள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை வந்து இருந்தார். இந்த நிலையில் விஜய் நந்தா மும்பையில் பழங்காலத்து சிலைகளை பதுக்கி வைத்திருப்பதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் பேரில் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு விஜய்நந்தாவின் வீடு மற்றும் பைகுல்லாவில் உள்ள அவரது குடோனில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த பழங்காலத்து கலைப்பொருட்கள் மற்றும் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவில்களில் திருடப்பட்டவை
இதில், முதலாம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட டெராகோட்டா சிலைகள், 17–வது நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட வெண்கலத்தினால் ஆன மகிஷாசுரன் சிலை, 18–வது நூற்றாண்டை சேர்ந்த விநாயகர் சிலை முக்கியமானவை ஆகும். மேலும் வரதா விநாயகர், பத்மபானி, லோகேடேஸ்வரா, விஷ்ணு உள்ளிட்ட சாமிகளின் 6 பெரிய கற்சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சிலைகள் கிழக்கு, தென் இந்திய கோவில்களில் திருடப்பட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.
விசாரணை
இதையடுத்து பழங்காலத்து பொருட்களை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக அதிகாரிகள் விஜய் நந்தாவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பழங்காலத்து இந்திய கலைப்பொருட்கள், சிலைகளை விஜய்நந்தா அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கடத்தி ஏலத்தில் விட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
இவரது கூட்டாளியான உதித் ஜெயின் சமீபத்தில் சென்னை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினத்தந்தி