கவர்னருடன் தனித்தனியாக சந்திப்பு ஓ.பன்னீர்செல்வம் சசிகலா மனு,ஜனாதிபதி, பிரதமருக்கு அறிக்கை அனுப்பினார், கவர்னர்
ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவும் கவர்னர் வித்யாசாகர் ராவை தனித்தனியாக சந்தித்து ஆட்சி அமைப்பது தொடர்பாக மனு அளித்தனர்.
ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.
ராஜினாமா கடிதம்
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா பின்னர், சட்டசபை அ.தி.மு.க. கட்சியின் தலைவராகவும் (முதல்-அமைச்சர்) தேர்ந்து எடுக்கப்பட்டதால், அவருக்கு வழிவிடும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கவர்னர் மாளிகையில் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். சசிகலா முதல்-அமைச்சராக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான கடிதமும் கவர்னர் மாளிகையில் வழங்கப்பட்டது.
ஆனால், முதல்-அமைச்சராக பதவி ஏற்குமாறு கவர்னரிடம் இருந்து சசிகலாவுக்கு உடனடியாக அழைப்பு வரவில்லை.
போட்டா போட்டி
இதற்கிடையே, தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி பேட்டி அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவரை அ.தி.மு.க.வின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்குவதாக சசிகலா அறிவித்தார்.
இதனால் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு உள்ளது. ஆட்சியை பிடிப்பதில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், சசிகலாவுக்கும் இடையே போட்டா போட்டி ஏற்பட்டு உள்ளது. இரு தரப்பினரும் கட்சியில் தங்களுக்கு ஆதரவை திரட்டும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள்.
கவர்னர் வந்தார்
இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக கவர்னர் பொறுப்பையும் சேர்த்து கவனிக்கும் மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ், மும்பையில் இருந்து விமானம் மூலம் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை வந்தார். விமானநிலையத்தில் இருந்து அவர் காரில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு 3.53 மணிக்கு போய்ச்சேர்ந்தார்.
கவர்னரை சந்திக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாலை 5 மணிக்கும், சசிகலாவுக்கு இரவு 7.30 மணிக்கும் நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு
எனவே, கவர்னரை சந்திப்பதற்காக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை 4.40 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு வந்தார். அவருடன் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் பி.எச்.பாண்டியன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோரும் சென்றனர்.
இந்த சந்திப்பின் போது, தனது ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்றுக்கொள்ள விரும்புவதாக கவர்னரிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக தெரிகிறது. மேலும் சில கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் கவர்னரிடம் அவர் அளித்தார்.
மாலை 4.45 மணிக்கு தொடங்கிய இந்த சந்திப்பு 5.10 மணி வரை நீடித்தது.
தர்மம் வெல்லும்
கவர்னருடனான சந்திப்பு முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார். அவரிடம் நிருபர்கள் பேட்டி காண முயன்றபோது, அவர் சிரித்தபடி கைகூப்பி வணங்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
பின்னர் கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்துக்கு போய்ச் சேர்ந்ததும் அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, உறுதியாக நல்லதே நடக்கும் என்று கூறிய அவர், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும் என்றும் தெரிவித்தார். ஆனால் கவர்னரிடம் பேசியது பற்றிய விவரங்களை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
சசிகலா
இதேபோல் சசிகலா இரவு 7.30 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு சென்று வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 8 மணி வரை 30 நிமிடம் நடைபெற்றது. சசிகலாவுடன் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார், தங்கமணி, கே.பி.அன்பழகன், பாண்டியராஜன் உள்ளிட்ட 10 அமைச்சர்களும் முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான செங்கோட்டையனும் கவர்னர் மாளிகைக்கு சென்று இருந்தனர்.
கவர்னரை சசிகலா சந்தித்து பேசிய போது, அ.தி.மு.க.வில் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக கூறி, தன்னை சட்டசபை அ.தி.மு.க. கட்சியின் தலைவராக தேர்ந்து எடுத்ததற்கான ஆவணச்சான்றுகளை அவரிடம் வழங்கினார்.
கவர்னரை சந்திக்க செல்லும் முன் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்ற சசிகலா, அங்கு தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களின் பட்டியல் அடங்கிய கோப்பை வைத்து அஞ்சலி செலுத்தினார். எம்.ஜி.ஆர்., அண்ணா சமாதிகளிலும் அஞ்சலி செலுத்தினார்.
ஜனாதிபதிக்கு அறிக்கை
ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் தெரிவித்த கருத்துகளை கேட்டு அறிந்த கவர்னர் வித்யாசாகர் ராவ் தனது முடிவை உடனடியாக தெரிவிக்கவில்லை. தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அவர் அறிக்கை அனுப்பி இருக்கிறார்.
எனவே, முதல்-அமைச்சர் நாற்காலியில் அமரப்போவது ஓ.பன்னீர்செல்வமா? அல்லது சசிகலாவா? என்பது கவர்னர் எடுக்கும் முடிவை பொறுத்தே அமையும்.
நன்றி : தினத்தந்தி