73 தொகுதிகளில் பிரச்சாரம் ஓய்ந்தது உத்தரப் பிரதேசத்தில் நாளை முதல் கட்டத் தேர்தல்
உத்தரப் பிரதேசத்தில் 73 தொகுதிகளில் நாளை முதல் கட்டத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
உத்தரப் பிரதேச சட்டப்பேர வைக்கு நாளை தொடங்கி மார்ச் 8 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறகிறது. இதில் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள 15 மாவட்டங்களுக்குட்பட்ட 73 தொகுதிகளில் நாளை முதல்கட்டதேர்தல் நடைபெறு கிறது. குறிப்பாக,
2013-ல் வகுப்புக் கலவரத்தை எதிர்கொண்ட முஸாபர்நகர், ஷாம்லி ஆகிய மாவட்டங்களும் இதில் அடக்கம்.
பாக்பட், மீரட், காஸியாபாத், கவுதம்புத் நகர், ஹாபூர், புலந்த்ஸாகர், அலிகார், மதுரா, ஹத்ரஸ், ஆக்ரா, எட்டா, பிரோஸா பாத், காஸ்கஞ்ச் ஆகியவை முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ள பிற மாவட்டங்களாகும்.
அரசியல்வாதிகள் ஆர்வம்
முதல்கட்டத் தேர்தல் எப்படி நடக்கிறது என்பதைப் பொறுத்தே மற்ற 6 கட்ட தேர்தலும் அமையும் என்பதால் அரசியல் கட்சிகள் அனைத்துமே இதில் மிக ஆர்வமாக உள்ளன.
முதல்கட்டத் தேர்தலில் 2.57 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 24 லட்சம் பேர் 18 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள். பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 1.17 கோடி ஆகும்.
இந்த பிராந்தியத்தில் 2014-ல் நடந்த மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு நல்ல ஆதரவு இருந்தது. அதேநேரம் 2012-ம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் தலா 24 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
பாஜக 11, ராஷ்ட்ரிய லோக் தளம் 9, காங்கிரஸ் 5 தொகுதிகளில் வென்றன. இப்போது காங்கிரஸ் கட்சி ஆளும் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடுகிறது.
உ.பி.யில் 7 மாவடங்களுக் குட்பட்ட 40 தொகுதிகளில் நடைபெற உள்ள 7-வது மற்றும் கடைசிக் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. இந்தத் தொகுதி களில் மார்ச் 8-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும்.
சோன்பத்ரா, மிர்சாபூர், சந்தவுளி ஆகிய நக்சல் ஆதிக்கம் நிறைந்த 3 மாவட்டங்கள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதிக்குட்பட்ட (வாரணாசி) பேரவைத் தொகுதி களும் இதில் அடங்கும். மனு தாக்கல் செய்ய வரும் 16-ம் தேதி கடைசி நாளாகும்.
நன்றி : தி இந்து தமிழ்