தேமுதிகவை அழிக்க நினைத்தோரின் கட்சி இன்று பல பிரிவுகளாக பிளவு: விஜயகாந்த்
”நம்மை அழிக்க நினைத்தவர்கள் தானாக அழிவதையும், நம் கட்சியை பிளவுபடுத்த எண்ணியவர்களின் கட்சி, இன்று பல பிரிவுகளாக பிளவுபட்டு இருப்பதையும் நம் கண் முன்னே காண்கிறோம்” என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”இன்று தேமுதிக 17-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை எண்ணி நாம் அனைவரும் பெருமைப்படுவோம்.
தமிழகம் முழுவதும் தேமுதிக கொடி பட்டொளி வீசி பறக்க காரணமான நம் கட்சியைச் சேர்ந்த அனைவருக்கும், இந்த நல்ல நாளில் எனது நன்றியையும், சந்தோஷத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகம் முழுவதும் பட்டி, தொட்டி எங்கும் கொடியேற்றி தேமுதிகவின் கொள்கைப்படி ‘இயன்றதைச் செய்வோம் இல்லாதவற்கே’ என இந்த நல்ல நாளில், நம்மால் இயன்ற உதவிகளை நம் மக்களுக்கு வழங்குவோம்.
தேமுதிக கட்சி பீனிக்ஸ் பறவை போன்றது. எத்தனையோ வஞ்சகங்கள், துரோகங்கள், தோல்விகள் வந்தாலும் மீண்டும் விஸ்வரூப வளர்ச்சி பெற்று வருங்காலத் தமிழகம் நாம் எண்ணுகின்ற தமிழகமாக மாற்ற வீறுநடை போடுவோம்.
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்ற கூற்றுப்படி நம்மை அழிக்க நினைத்தவர்கள் தானாக அழிவதையும், நம் கட்சியை பிளவுபடுத்த எண்ணியவர்களின் கட்சி, இன்று பல பிரிவுகளாக பிளவுபட்டு இருப்பதையும் நம் கண் முன்னே காண்கிறோம்.
நல்லவர்கள் லட்சியம், வெல்வது நிச்சயம் என்ற சொல்படி நல்ல எண்ணங்களோடு நம் கட்சியையும் நாட்டையும் காப்பாற்றுவோம் என்று நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்” என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.