Breaking News
‘‘சட்டசபை கூடும் போது பெரும்பான்மையை நிரூபிப்பேன்’’ ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

அம்மாவின் ஆன்மா

கேள்வி:– சசிகலாவுக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்களே?

பதில்:– நான் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறேன். எங்களிடம் உள்ள எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் சுதந்திரமாக வெளியே உலா வந்துகொண்டு இருக்கின்றனர். சுதந்திரமாக உங்களை (பத்திரிகையாளர்கள்) சந்தித்து பேசி வருகின்றனர். ஆனால் சசிகலா ஒரு சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்திருக்கிறார். அந்த எம்.எல்.ஏ.க்களை நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் உங்களது தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்து, மனசாட்சியோடு இங்கு வந்தீர்கள் என்றால் ‘அம்மா’வின் (ஜெயலலிதா) ஆன்மா உங்களை ஏற்றுக்கொள்ளும் என்பதை தெரிவிக்க கடமைப்பட்டு இருக்கிறேன்.

கவர்னருடன் சந்திப்பு

கேள்வி:– கவர்னருடன் மைத்ரேயன் எம்.பி. சந்தித்ததன் நோக்கம் என்ன?

பதில்:– மரியாதை நிமித்தமாக சந்தித்து இருக்கிறார்.

கேள்வி:– சிறைவைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ.க்களை மீட்க முதல்–அமைச்சராகிய உங்களுடைய நடவடிக்கை என்ன? இதுதொடர்பாக கவர்னரை ஏதும் வலியுறுத்துவீர்களா?

பதில்:– நீங்களே அங்கு சென்று நடந்தவற்றை படம் பிடித்து பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் காண்பித்து வருகின்றீர். உங்களுக்கு உண்மை நிலவரங்கள் தெரியும். ஜனநாயகத்தின் 4–வது தூணான பத்திரிகை, ஊடகங்கள் அதனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். இன்றைக்கு கூட அங்கிருக்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என்னை தொடர்புகொண்டு தங்கள் மனதில் உள்ளதை சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார்கள், பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஒவ்வொரு எம்.எல்.ஏ.வையும் தலா 4 குண்டர்கள் சுற்றிக்கொண்டு இருக்கின்றனர். அங்கிருந்து வெளியேற முடியாத அளவுக்கு அவர்கள் சித்ரவதை செய்யப்படுகிறார்கள். அ.தி.மு.க.வில் இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறதே? என்று மனம் வெதும்பி இருக்கிறார்கள். அம்மா வரவேண்டும் என்று தான் மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். பன்னீர்செல்வத்துக்கோ, எம்.எல்.ஏ.க்களுக்கோ ஓட்டுப்போடவில்லை. அம்மாவுக்காக தான் ஓட்டுகள் கிடைத்து எம்.எல்.ஏ.வாக உள்ளோம் என்பதை அவர்கள் மனதில் கொள்ளவேண்டும்.

சசிகலாவுக்கு ஒத்துழைக்க மாட்டோம்

கேள்வி:– டி.ஜி.பி.க்கு நீங்கள் உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்கலாமே?

பதில்:– ஒரு அசாதாரண சூழ்நிலை என்னால் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அமைதி வழியில், அற வழியில் செயல்பட்டு வருகிறோம். நான் மட்டுமல்ல அனைவருமே அப்படித்தான். அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் இங்கு வந்து அவர்களது எண்ணங்களை பிரதிபலிக்கின்றனர். எந்த காலத்திலும் சசிகலாவை முதல்–அமைச்சராக கொண்டுவருவதற்கு நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம் என்று முடிவு எடுத்துள்ளனர்.

கேள்வி:– தொடரும் இந்த சூழ்நிலைக்கு முடிவு தான் என்ன?

பதில்:– சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பிரச்சினை வந்ததில் இருந்து எங்கு எத்தனை பேர் வந்திருக்கிறார்கள்? என்று பார்க்கிறீர்கள். ஆனால் அந்த விடுதிக்கு சசிகலா நேற்றும் (நேற்றுமுன்தினம்) போனார், இன்றும் (நேற்று) போனார். எதுக்கு போகிறார்?

75 நாட்கள் அம்மா ஆஸ்பத்திரியில் இருந்தார். நாங்கள் அனைத்து நாட்களும் காலை முதல் மாலை வரை அங்கேயே தான் இருந்தோம். ஆனால் அவரை பார்க்க முடிந்ததா? அவர் தான் (சசிகலா) உள்ளே இருந்து அம்மாவை பார்த்து வந்தார். அவர் ஒரு தடவையாவது வெளியே வந்து பத்திரிகையாளரை பார்த்து அம்மா நலமாக இருக்கிறார் என்று சொன்னாரா? இது எந்த விதத்தில் நியாயம்?

இதைத்தான் மக்கள் இன்றைக்கு கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். சிகிச்சையின்போது உண்மையில் என்ன நடந்தது? என்று மக்கள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதற்காக தான் இன்றைக்கு விசாரணை கமி‌ஷன் அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

எனக்கு அதிகாரம் இல்லை

கேள்வி:– முதல்–அமைச்சராக இருந்தபோது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

பதில்:– என்னை பொறுத்தவரையில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை நிறுவி அரும்பாடு பட்டு வளர்த்தார். அதன்பிறகு ஜெயலலிதா 28 ஆண்டு காலம் தனது கடும் உழைப்பால் வேதனைகளை, சோதனைகளை உள்வாங்கி, கடுமையாக உழைத்து இந்த இயக்கத்தை இந்தியாவின் 3–வது பெரிய இயக்கமாக வளர்த்து இருக்கிறார். என்னால் ஆட்சிக்கோ, கட்சிக்கோ ஒரு சிறிய பங்கம் கூட வரக்கூடாது, ஒரு துளியளவு கூட பின்னடைவு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை எனது மனசாட்சிப்படி எல்லாவற்றையும், எவ்வளவு பெரிய அவமானங்கள் வந்தாலும், என்ன நடவடிக்கைகள் வந்தாலும் இயக்கத்தை காப்பாற்றுவதற்காக அந்த பின்னடைவை தாங்கினேன். தவிர, எனக்கு எந்த சுதந்திரமும், அதிகாரமும் இல்லை என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

தற்போது ஏராளமான தொலைப்பேசி அழைப்புகள் வருகின்றது. ‘‘நீங்கள் எடுத்த குறிக்கோள், என்றைக்கு தனி மனிதனாக இருந்து போராடுவீர்கள் என்று சொன்னீர்களோ, தமிழக மக்கள் அனைவரும் உங்கள் பின்னால் நிற்கிறார்கள். நாங்கள் உங்களுக்கு பரிபூரணமாக எங்களது ஒத்துழைப்பை தருகிறோம்’’ என்று இன்றைக்கு ஆங்காங்கே இருந்து குரல் தருகிறார்கள். இதுவரை என்னை, ஜெயலலிதா கடுஞ்சொல் கூறியது கிடையாது. கூறியிருந்தாலும் அன்போடு ஏற்றுக்கொண்டு இருப்பேன். அது எல்லோருக்கும் தெரியும். அது தான் இவர்களுக்கு கோபம்.

நீலிக்கண்ணீர்

கேள்வி:– அ.தி.மு.க. இரண்டாக உடைய, 2–ம் கட்ட தலைவர்கள் உருவாக சசிகலா காரணம் என்று கூறுகிறார்களே?

பதில்:– அது ஊருக்கே தெரியும். அம்மாவின் ரத்த சொந்தம் யாரு? தீபாவும், தீபக்கும் தானே. அம்மாவின் உடலை பார்க்க முடியாமல் இரவு 12.30 முதல் காலை 6.30 மணி வரை அந்த பெண் தீபா கதறிக்கொண்டு இருந்தார். ‘உயிரோடு இருக்கும்போது தான் பார்க்கவிடவில்லை. இறந்த உடலையாவது என்னை பார்க்கவிடுங்கள்’ என்று கதறிக்கொண்டு இருந்தார். ஆனால் யாரும் பார்க்கவிடவில்லை.

இதுவரை சொன்ன விளக்கமே உங்களுக்கு பொருத்தமாக, போதுமானதாக இருக்கும். இன்றைக்கு நீலிக்கண்ணீர் வடித்து எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் வைத்துக்கொள்ள நினைக்கிறார்கள். நான் மீண்டும் சொல்கிறேன். தயவுசெய்து எம்.எல்.ஏ.க்கள் உங்களது தொகுதிகளுக்கு சென்று பாருங்கள். மனசாட்சிப்படி திருந்தி இங்கே வருவார்கள். அப்போது இதை நீங்கள் (பத்திரிகையாளர்கள்) சசிகலாவிடம் கேட்க வேண்டும்.

கேள்வி:– சட்டசபையில் உங்கள் ஆதரவு எப்படி?

பதில்:– சட்டசபை கூடும்போது பாருங்கள். நான் தான் அறுதி பெரும்பான்மையை நிரூபிப்பேன். இன்றைக்கு தமிழக மக்கள் நல்ல விழிப்புணர்வோடு இருக்கிறார்கள். அதனை அரசியல்வாதிகள் கண்கூடாக பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழக மக்களின் எழுச்சியை இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இருந்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த மாதிரி ஒரு எழுச்சி இந்தியாவின் எந்த மாநிலத்திலும் நடந்தது கிடையாது என்ற வரலாறே உண்டு.

அசிங்கப்படுத்தினார்கள்

நான் முதல்–அமைச்சர் பதவியை வேண்டாம் என்றுதானே சொன்னேன். ஆனால் என்னை உட்காரவைத்து அசிங்கப்படுத்தி விட்டீர்களே. சட்டமன்ற குழுவுக்கு தலைவன் நான். ஆனால் என்னை ஒதுக்கி வைத்து இவர்கள் நாற்காலி போட்டு உட்கார்ந்திருக்கிறார்கள். தலைமைக்கழக அனைத்து கூட்டங்களிலும் அம்மா அருகில் தான் என்னை உட்கார வைப்பார். அதுதான் வரலாறு என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் நான் அதை பெரிதாக நினைக்கவில்லை. அப்புறம் என்னை பலர் தொடர்புகொண்டு’’, என்ன அண்ணே, இப்படி உங்களை அசிங்கப்படுத்திட்டாங்க… என்று கேட்டனர். பொறுமையாக இருங்க, என்னிடம் பேசியதுபோல வேறு யாரிடமும் பேசிடாதீர்கள் என்று சமாதானப்படுத்தினேன், மாறாக யாரையும் தூண்டவில்லை.

குறை சொன்னது இல்லை

எந்த எம்.பி.க்களையும், எம்.எல்.ஏ.க்களையும் தூண்டிவிடவில்லை. கட்சி நிர்வாகிகள், மாணவர்கள் என யாரையும் நான் தூண்டிவிடவில்லை. கட்சியின் வளர்ச்சிக்கும், கட்சி கட்டுப்பாடுக்கும் ஜெயலலிதா கஷ்டப்பட்டதை உடன் இருந்து பார்த்திருக்கிறேன். உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் கூட சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா செய்த பிரசாரங்களை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன். ஜெயலலிதாவிடம் சென்று நான் இதுவரை எந்த குறையும் சொன்னது இல்லை.

யாரை பற்றியும் எந்த குறையும் சொன்னது இல்லை. ஒரு சாதாரண தொண்டர் கூட இந்த இயக்கத்துக்கு நல்ல பல காரியங்களை செய்து பொறுப்புக்கு வந்திருப்பார்கள். நம்மால் அவர்களுக்கு எந்த தொந்தரவும் இருக்கக்கூடாது என்பதற்காக எதுவும் சொன்னது இல்லை. ஜெயலலிதா கூட என்னை திட்டியிருக்கிறார். ‘‘என்ன பன்னீர்செல்வம் நீங்கள் என்னுடன் எல்லா கூட்டத்திலும் இருக்கிறீர்கள். உங்களை நான் முழு நேரமும் அழைத்து பேசுகிறேன். இதுவரை நீங்கள் யாரை பற்றியும் குறை சொன்னது இல்லையே’’ என்று கேட்டார். யாரை பற்றியும் குறை சொல்லாமல் இருந்ததால் என்னை சில நேரம் கடிந்திருக்கிறார்.

மனசாட்சி

2012–ம் ஆண்டு சசிகலாவையும், அவரது குடும்பத்தாரையும் ஜெயலலிதா வெளியேற்றினார். 4 மாதம் கழித்து திரும்பவும் வந்தார்கள். அந்த சமயத்தில், நான் உள்பட அமைச்சர்களை கூப்பிட்டு வைத்து ‘‘யாரையும் நான் உயிரோடு இருக்கும் வரை போயஸ் கார்டனுக்குள் நுழையவிடமாட்டேன்’’ என்று சொன்னார்களா? இல்லையா? என்று இப்போது அமைச்சர்களாக இருப்பவர்களிடமும் கேளுங்கள், மனசாட்சி உள்ளவர்கள் சொல்வார்கள். இதைப்பற்றி ஜெயலலிதா சொல்லிக்கொண்டே இருப்பார். சசிகலாவிடம் நீங்கள் நேரடியாகவும், யார் மூலமாகவும் தொடர்புகொள்ளக்கூடாது என்று ஒவ்வொரு 4 மாதங்களுக்கு இடையேயும் ஜெயலலிதா கூறினார். அதற்கு பின்பு நான் சசிகலாவை பார்க்கவும் இல்லை. பேசவும் இல்லை. பேசுவதற்கும் முயற்சி செய்யவில்லை.

பத்திரிகையாளர்கள் மீது…

கேள்வி:– கூவாத்தூரில் பத்திரிகையாளர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்:– எம்.எல்.ஏ.க்களுக்கு என்னுடைய பணிவான வேண்டுகோள் என்னவென்றால் நம்முடைய கட்சி எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவால் பேணி வளர்க்கப்பட்ட இயக்கம். ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை ஆராய்ந்துகொண்டிருக்கிறீர்கள். இதுவரை அ.தி.மு.க. தொண்டர்கள் பத்திரிகையாளர்களை தாக்கியதாக வரலாறு உண்டா? என்றால் இல்லை. ஆனால் தற்போது நடந்துகொண்டிருக்கிறது. அங்கு உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு அரண் போட்டு உட்கார்ந்திருப்பவர்கள் யார்? குண்டர்கள். அவர்கள் அழைத்து வந்த அடியாட்கள். அந்த ஊர் பொதுமக்களும் ஆர்ப்பாட்டம் செய்துவருகிறார்கள். பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சியாளர்களை தாக்கிய அந்த குண்டர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜெயலலிதா எண்ணங்கள்

கேள்வி:– எம்.பி.க்கள் தொடர்ச்சியாக உங்கள் அணிக்கு வருவதற்கு பா.ஜனதா பின்னால் இருந்து இயக்குவதாக கூறப்படுகிறதே?

(அப்போது அருகில் இருந்த கே.பி.முனுசாமி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக இருப்பதால் அவர்கள் வந்து ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்று பதில் அளித்தார்.)

பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதில்:–

அ.தி.மு.க.வின் உண்மையான தொண்டர் என்பதை உணர்ந்து என்னிடம் எம்.எல்.ஏ.க்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். உதவியாளராக இருக்கத்தான் சசிகலாவை உடன் வைத்திருந்தார் ஜெயலலிதா. அங்கு வேலை பார்க்கும் ராஜம் அம்மாள் கூட இருக்கிறார். வேலைக்கு வைத்தவர்கள் அம்மா ஆக முடியுமா?. என்ன வே‌ஷம் போட்டாலும் சரி, ஒரு காலத்திலும் தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். சசிகலா பொதுச்செயலாளர் ஆனதில் இருந்து எத்தனை கூட்டத்துக்கு கட்சி அலுவலகத்துக்கு வந்திருக்கிறார்?. அவரை ஆதரிக்க யாரும் வரவில்லை. நான் என்னுடைய உண்மை நிலையை எடுத்துக்கூறிய பின்னர் பொதுமக்கள் அனைவரும் வந்து ஆதரவு தருகிறார்கள்.

என்றைக்கும் தமிழக மக்களின் எண்ணங்கள் வீண் போகாது. உறுதியாக ஜெயலலிதாவின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அ.தி.மு.க. இருக்கும். ‘‘தன்னுடைய மறைவுக்கு பின்னால் தனது சொத்துகள் அ.தி.மு.க.வுக்குத்தான் சொந்தம் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். நான் சசிகலாவை பார்த்து கேட்கிறேன் ஜெயலலிதாவின் சொத்துகளை கட்சிக்கு கொண்டு வந்து சேர்க்கவேண்டும். அப்படி இல்லை என்றால் ஒவ்வொரு தொண்டனும் சேர்க்க வைப்பார்கள் என்று சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். எவ்வளவு இருக்கிறது என்பதை நான் போகப் போக சொல்கிறேன்.

கேள்வி:– கவர்னர் காலதாமதம் செய்வதாக சசிகலா தரப்பினர் குற்றஞ்சாட்டுகிறார்களே? விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோருகிறார்களே?, நீங்கள் இதுதொடர்பாக வலியுறுத்துவீர்களா?

பதில்: கோரிக்கை வைத்தது அவர்கள். பின்னர் ஏன் நாங்கள் வலியுறுத்தவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.