தமிழ்நாட்டில் யார் ஆட்சி? ‘கவர்னர் முடிவு எடுக்க தாமதிப்பது சட்டவிரோதம் அல்ல’ சட்ட நிபுணர் கருத்து
தமிழ்நாட்டில் யார் ஆட்சி அமைப்பது? என்பது பற்றி முடிவு எடுக்க கவர்னர் தாமதப்படுத்துவது சட்டவிரோதம் அல்ல என்று தந்தி டி.வி.யிடம் சட்ட நிபுணர் சோலி சொராப்ஜி கருத்து தெரிவித்தார்.
சட்ட நிபுணர்
இந்தியாவின் முன்னாள் அட்டார்னி ஜெனரலும், சட்ட நிபுணருமான சோலி சோராப்ஜி, டெல்லியில் ‘தந்தி’ டி.வி.க்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:–
தமிழ்நாட்டில் தற்போது யார் ஆட்சி அமைப்பது என்பது குறித்த முடிவை எடுப்பதை கவர்னர் தாமதப்படுத்துவது சட்டவிரோதம் என்று சொல்ல முடியாது. அது சட்டவிரோதம் ஆகாது. சசிகலாவின் கோரிக்கையை கவர்னர் நிராகரிக்கவில்லை. அவர் முடிவு எடுப்பதில்தான் தாமதம் ஏற்படுகிறது. நிராகரிக்காத பட்சத்தில் அது சட்டவிரோதம் ஆகாது.
சசிகலாவுக்கு எதிரான வழக்கின் மீதான தீர்ப்பு இன்னும் நிலுவையில் இருக்கிறது. அந்த தீர்ப்பு வரும்வரையில் காத்து இருப்பது எந்த வகையிலும் தவறு இல்லை.
கவர்னர் ஆலோசித்தார்
தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் நேற்று இதுகுறித்து என்னிடம் ஆலோசித்தார்.
சாதாரணமாக கவர்னர் மந்திரிசபையின் ஆலோசனைப்படியும், அங்கு என்ன கோரிக்கை வைக்கப்படுகிறதோ அதனையும் நிறைவேற்றுவார்.
சசிகலா மீது வழக்கு நிலுவையில் உள்ளது. மேல்முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்பு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது.
கீழ்க்கோர்ட்டில் அவர் மீது மிகவும் கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு தண்டனையும் விதிக்கப்பட்டது. ஐகோர்ட்டு அதனை நிராகரித்தது. ஆனால் மேல்முறையீட்டு வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அவர் மீது சுப்ரீம்கோர்ட்டும் குற்றம் சுமத்தினால் நிலைமை என்னவாகும்? இப்போது அவர் பதவிஏற்றுக்கொண்டால் அப்படி ஒரு நிலைமை உருவாகும்போது அவர் பதவி விலக வேண்டும்.
ஆழ்ந்த சிந்தனை
எனவே, இதுபோன்ற விசித்திரமான சூழ்நிலையில் கவர்னர் ஆழமாக சிந்தித்து இருப்பார். அதன் விளைவாக சற்று தாமதப்படுத்தலாம்.
சுப்ரீம் கோர்ட்டு ஓரிரு நாட்களில் தீர்ப்பை வெளியிடாமல் ஒரு வாரத்துக்கும் மேல் தாமதப்படுத்தினால் அப்போது கவர்னர் வேறு மாதிரி முடிவு எடுக்கலாம். தற்போது அவர் சசிகலாவின் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. ஒத்திப்போட்டு இருக்கிறார். இது தவறானது அல்ல.
சுப்ரீம் கோர்ட்டுக்கு இது எத்தனை முக்கியமான வழக்கு என்று தெரியும். புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை தீர்ப்பு வரலாம் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு சோலி சேராப்ஜி கூறினார்.
நன்றி : தினத்தந்தி