நெருக்கடி அதிகரிப்பதால் ஆளுநரின் மவுனம் கலைய வாய்ப்பு: இன்று தலைமைச் செயலகம் செல்கிறார் பன்னீர்செல்வம்
தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று முக்கிய முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் அடுத்ததடுத்த நிகழ்வுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஜெயலலிதா மறைந்த 2 மாதத்தில் அதிமுகாவின் பொதுச்செயலாளர் பதவியை தன்வசப்படுத்திய சசிகலா, அடுத்து முதலமைச்சர் பதவியை பிடிக்க முயன்றுள்ளார்.
இதற்கான அச்சாரமாகவே கடந்த 5ம் தேதி சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினா£மாவை ஆளுநர் வித்யாசார் ராவ் ஏற்றுக்கொண்டார். ஓரிரு நாட்களில் சசிகலா பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். இதனால் அதிமுக தற்போது 2 அணிகளாக பிரிந்துள்ளன.
ஓ.பன்னீர்செல்வத்திற்கு இதுவரை 7 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அத்துடன் 11 எம்.பி.க்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நாளுக்கு நாள் ஆதரவு பெருகியுள்ளதால், சசிகலா அதிருப்தி அடைந்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்கள் கூவத்தூர் சொகுசு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று முடிவு செய்வார் என்று கூறப்படுகிறது. உடனே முடிவு செய்யுமாறு நெருக்கடி அதிகரிப்பதால் ஆளுநரின் மவுனம் கலைய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
இதனிடையே அதிமுக எம்.எல்.ஏக்கள் சுதந்திரமாக உள்ளார்களா என்ற வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது. கூவத்தூரில் விசாரணை நடத்திய அதிகாரிகள், உயர்நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க உள்ளனர். உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆளுநர் முடிவிருக்கும் என்று கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் தனது பலத்தை சட்டப்பேரவையில் நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடலாம் என்றும், சசிகலாவை ஆட்சி அமைக்குமாறும் ஆளுநர் உத்தரவிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு வாரத்திற்கு பிறகு, தலைமை செயலகத்திற்கு இன்று செல்ல உள்ளார்.
நன்றி : தினகரன்