அதிகாரம் கண்ணை மறைக்கிறது! : அகிலேஷ் மீது மோடி குற்றச்சாட்டு
”ஆட்சி அதிகாரம் கண்ணை மறைப்பதால், மத்திய அரசின் சாதனைகளை, உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவால் பார்க்க முடியவில்லை,” என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். உ.பி.,யில், சமாஜ்வாதி கட்சித் தலைவர், அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், மார்ச், 8 வரை, ஏழு கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடக்கஉள்ளது. இரண்டாம் கட்டத் தேர்தல், நாளை நடக்கிறது.
இந்நிலையில், லக்கிம்புர்கேரியில், நேற்று நடந்த, பா.ஜ., பிரசார கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மத்திய அரசு திறம்பட செயல்பட்டு, பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இந்த பணிகளை, ஆட்சி அதிகாரம் கண்ணை மறைப்பதால், உ.பி., முதல்வர் அகிலேஷால் பார்க்க முடியவில்லை. தன் ஐந்தாண்டு கால ஆட்சியில் செய்த சாதனைகளை, அகிலேஷ் பட்டியலிடத் தயாரா? இந்த தேர்தலில், பா.ஜ.,வுக்கு, உ.பி., மக்கள் ஒருமுறை வாய்ப்பளிக்க வேண்டும். பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், அனைத்து சமூக விரோதிகளும், அடுத்த ஆறு மாதங்களில் சிறையில் தள்ளப்படுவர். உ.பி.,யில், சட்டம் – ஒழுங்கு மோசமாக சீர்கெட்டு உள்ளது. பாலியல் பலாத்காரங்கள், கொலை சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. சிறைகளில் இருந்தே, மாபியா கும்பல்கள் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றன. சிறப்பான செயல்பாடாக, அகிலேஷ் கூறுவது இவற்றைத் தானா? முந்தைய, பகுஜன் சமாஜ் ஆட்சியில் நடந்த ஊழல்களை விசாரிப்பதாக, அகிலேஷ் வாக்குறுதி அளித்திருந்தார். அவ்வாறு விசாரணை நடத்தப்படாதது ஏன்? இதற்கு பிரதிபலனாக, அவர் பெற்றது என்ன? காங்., சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் அரசுகள், அனைத்து விஷயங்களிலும் படுதோல்வியை சந்தித்துள்ளன. அக்கட்சிகள் மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு கோருவதற்கு தார்மீக உரிமை இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.
நன்றி : தினமலர்