கருணாநிதி வீட்டில் புகுந்த இளைஞர் கைது: பொம்மை துப்பாக்கி பறிமுதல்
கருணாநிதி வீட்டில் திருடுவதற்காக பொம்மை துப்பாக்கியுடன் புகுந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீடு மயிலாப்பூர் சிஐடி காலனியில் உள்ளது. அவர் தனது மகள் கனிமொழி எம்.பி., அவரது மகன் ஆதித்யா ஆகியோருடன் இங்கு வசிக்கிறார். வீட்டு முன்பு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் சுழற்சி முறையில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கனிமொழி நேற்று காலை புறப்பட்டுச் சென்றார். வீட்டில் ராஜாத்தி அம்மாள், 2 பணிப்பெண்கள் மட்டும் இருந்தனர்.
இந்நிலையில், மாலை 4.45 மணி அளவில், பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாரிடம் ஓடிவந்த ராஜாத்தி அம்மாள், வீட்டின் அறையில் புகுந்துள்ள மர்ம நபர் ஒருவர் தன்னை துப்பாக்கியைக் காட்டி மிரட்டுவதாக கூறினார். அதிர்ச்சி அடைந்த போலீஸார் ஓடிச் சென்று, அந்த இளைஞரை சுற்றி வளைத்தனர். மயிலாப்பூர் போலீஸாரும் விரைந்து சென்று விசாரித்தனர். அவர் பெயர் ராஜேந்திர பிரசாத் (30). திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: கருணாநிதி வீட்டின் ஓரமாக ராஜேந்திர பிரசாத் நேற்று அதிகாலை 1 மணி அளவில் வந்துள்ளார். பின்னர், சுவர் ஏறிக் குதித்து ஏ.சி. இயந்திரம் வழியாக பால்கனிக்குச் சென்றுள்ளார். திறந்திருந்த வீட்டு நூலக அறை வழியாக வீட்டுக்குள் புகுந்த அவர், அங்குள்ள அறையில் படுத்து தூங்கியிருக்கிறார்.
8 மணிக்கு கண் விழித்துப் பார்த்தபோது, ஆள் நடமாட்டம் இருந்துள்ளது. இதனால், அந்த அறையிலேயே பதுங்கி இருந்துள்ளார். மாலை 4.45 மணி அளவில் அங்கு வந்த ராஜாத்தி அம்மாளை, தன்னிடம் உள்ள பொம்மை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி உள்ளார். பணம் கொடுக்காவிட்டால் சுட்டு விடுவேன் என்றும் எச்சரித்துள்ளார். ‘தன்னிடம் பணம் இல்லை. எடுத்து வருகிறேன்’ என்று கூறிவிட்டு ராஜாத்தி அம்மாள் கீழே வந்து பாதுகாப்பு பிரிவு போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். பின்னர், போலீஸார் சென்று அந்த இளைஞரை கைது செய்தனர். அவரிடம் இருந்த பொம்மை துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
நன்றி : தி இந்து தமிழ்