ஓபிஎஸ்ஸை சந்தித்தது ஏன்?- லாரன்ஸ் விளக்கம்
முதல்வர் ஓ.பன்னீர்செலவத்தை சந்தித்தது ஏன் என்று லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவி வந்தது. இதில் சசிகலாவுக்கு குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவருடைய இல்லத்தை சந்தித்து பேசினார் லாரன்ஸ். இச்சந்திப்பைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு லாரன்ஸ் நேரில் ஆதரவு தெரிவித்தார் என்று செய்திகள் வெளியானது.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தது ஏன் என்பது குறித்து லாரன்ஸ், “நண்பர்கள், ரசிகர்களுக்கு வணக்கம். நான் எந்த அரசியல் கட்சியை ஆதரிப்பவனும் அல்ல. ஒரு கட்சியை ஆதரிக்கும் அளவுக்கு பெரிய நட்சத்திரமும் அல்ல. நான் ஜல்லிக்கட்டு கொண்டாட்டத்தைப் பற்றி முதல்வர் பன்னீர்செல்வத்திடம் சொன்ன போது அவர் உடனே அதற்கு ஒப்பதல் தந்தார்.
அவரை சந்தித்தது அதற்கு நன்றி தெரிவிக்கவே. ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு எனது ஆதரவைத் நான் தெரிவிக்கவில்லை. எனக்கு எந்த அரசியல் தொடர்பும் கிடையாது. இதை கவனத்தில் கொள்ளுமாறு ஊடகங்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவருடைய அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நன்றி : தி இந்து தமிழ்