ரஷ்யாவுடன் ரகசிய தொடர்பு டிரம்ப் ஆதரவாளர் நீக்கம்
அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பால் நியமிக்கப்பட்ட, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மைக்கேல் பிளின், ரஷ்யாவுடன் சர்ச்சைக்குரிய வகையில் தொடர்பு வைத்திருந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, பதவியை ராஜினாமா செய்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியை சேர்ந்த, டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று, ஜனவரியில், அதிபராக பொறுப்பேற்றார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக, தன் தீவிர ஆதரவாளர், மைக்கேல் பிளினை, டிரம்ப் நியமித்தார்.
அமெரிக்க அதிபராக, டிரம்ப் பதவி ஏற்பதற்கு முன், ரஷ்யா மீது, அமெரிக்கா விதித்துள்ள தடைகள் குறித்து, ரஷ்ய துாதருடன், மைக்கேல் பிளின், ரகசிய விவாதம் நடத்தியதாக தகவல் வெளியாகின; பின், இந்த உரையாடலை மறைக்க முயன்றதாக, பிளின் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. டிரம்ப் அரசை, பிளின் தவறுதலாக வழிநடத்துவதாக, அமெரிக்க நீதித்துறை, கடந்த மாதம் எச்சரித்திருந்தது. இதையடுத்து, பிளினுக்கு பரவலாக எதிர்ப்பு வலுத்தது. இந்நிலையில், தன் பதவியை, பிளின் நேற்று ராஜினாமா செய்தார். அவருக்கு பதில், தற்காலிக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக, ஜோசப் கீத் கெலாக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
நன்றி : தினமலர்