உ.பி. 2-ம் கட்ட தேர்தலில் 65.5% வாக்குப் பதிவு
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு நேற்று நடைபெற்ற 2-ம்கட்ட தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதுபோல உத்தராகண்ட் தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவாகின.
உ.பி.யில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, சஹாரன்பூர், பிஜ்னோர், மொரதா பாத், சம்பால், ராம்பூர், பரேலி, அம்ரோஹா, பிலிபித், கேரி, ஷாஜஹான்பூர், படாவுன் ஆகிய 11 மாவட்டங்களுக்குட்பட்ட 67 தொகுதிகளில் 2-ம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது.
இதில் மொத்தம் 720 வேட் பாளர்கள் களத்தில் உள்ளனர். 1.04 கோடி பெண்கள் உட்பட மொத்தம் 2.28 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.
சர்ச்சைக்குரிய அமைச்சர் ஆசம் கான் (சமாஜ்வாதி), அவரது மகன் அப்துல்லா ஆசம், காங்கிரஸ் முன்னாள் எம்பி ஜாபர் அலி நக்வி மகன் சைப் அலி நக்வி, முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதா, உ.பி.சட்டப்பேரவை பாஜக குழு தலைவர் சுரேஷ் குமார் கண்ணா, மாநில அமைச்சர் மெகபூபா அலி ஆகியோர் வேட்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
இங்கு சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி, பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. கடந்த 2012-ல் இந்த 67 தொகுதிகளில் நடந்த தேர்தலில், சமாஜ்வாதி 34, பகுஜன் சமாஜ் 18, பாஜக 10, காங்கிரஸ் 3 மற்றும் இதர கட்சிகள் 2 இடங்களில் வெற்றி பெற்றன.
உத்தராகண்டில் 68%
உத்தராகண்ட் சட்டப் பேரவைக்கு நேற்று ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவானது.
மாநிலத்தில் மொத்தம் உள்ள 70-ல் 69 தொகுதிகளில் நேற்று அமைதியாக வாக்குப்பதிவு நடை பெற்றது. கர்ணபிரயாக் தொகுதி யின் பிஎஸ்பி வேட்பாளர் குல்தீப் சிங் கன்வாசி உயிரிழந்ததால் அங்கு மார்ச் 9-ம் தேதிக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 628 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுமார் 74 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். இங்கு காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனினும், சில தொகுதிகளில் அதிருப்தி வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர். மேலும் 12 காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜக சார்பிலும் 2 பாஜக முன்னாள் எம்எல்ஏக்கள் காங்கிரஸ் சார்பிலும் போட்டியிடுகின்றனர்.
முதல்வர் ஹரீஷ் ராவத், ஹரித்வார் (ஊரகம்) மற்றும் கிச்சா (உதம்சிங் நகர் மாவட்டம்) ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். பாஜக மூத்த தலைவர் சத்பால் மஹராஜ் சவுபதகல் தொகுதியிலும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அஜய் பட் ராணிக்கெட் தொகுதியிலும் களம் காண்கின்றனர்.
நன்றி : தி இந்து தமிழ்