ஆசிய பாட்மிண்டன் போட்டி சிங்கப்பூரை வீழ்த்தியது இந்தியா
ஆசியா பாட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 4-1 என்ற கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தியது.
வியட்நாமில் உள்ள ஹோ சி மின் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, சிங்கப்பூரை எதிர்த்து விளையாடியது. முதலில் நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரணவ் ஜெர்ரி சோப்ரா, ஷிக்கி ரெட்டி ஜோடி 21-23, 17-21 என என்ற நேர் செட்டில் யோங் கய் டி ஹி, வெய் ஹன் டான் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
இதை தொடர்ந்து நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஷமீர் வர்மா 21-19, 21-16 என்ற நேர் செட்டில் கீன் யூ லோவை தோற்கடித்தார். ஆடவர் இரட்டையர் பிரிவில் மனுஅட்ரி, சுமித் ரெட்டி ஜோடி 21-12, 21-17 என்ற நேர் செட்டில் டேனி பாவா கிறிஸ் சான்டா, ஹென்ட்ரா வைஜெயா ஜோடியை வென்றது.
இதன் மூலம் இந்திய 2-1 என முன்னிலை வகித்தது. இதையடுத்து நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ரிதுபர்னா தாஸ் 23-21, 21-18 என்ற நேர் செட்டில் லியாங்கை வீழ்த்தினார்.
கடைசியாக நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வின் பொன்னப்பா, ஷிக்கி ரெட்டி ஜோடி 19-21, 21-17, 21-17 என்ற செட் கணக்கில் ரென் நியாங், ஜியா யிங் சி வாங் ஜோடியை தோற்கடித்தது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த கொரியாவை எதிர்கொள்கிறது.
நன்றி : தி இந்து தமிழ்