உச்ச நீதிமன்றம் விதித்த அபராதத்தை கட்டப் பணமில்லை; என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்: ராஷ்ட்ரிய ஜனதா தள எம்.எல்.ஏ.
உச்ச நீதிமன்றத்தின் அதிகார எல்லையை துஷ்பிரயோகம் செய்த தவறுக்காக பிஹார் ராஷ்ட்ரிய ஜனதா தள எம்.எல்.ஏ. ரவீந்திர சிங் என்பவருக்கு உச்ச நீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது.
தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை. இருப்பது ஒரு துப்பாக்கி ஒரு எஸ்.யு.வி. கார் அவ்வளவே கோர்ட் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று ரவீந்திர சிங் தெரிவித்துள்ளார்.
1990-களில் மத்திய பிஹார் சாதி வன்முறையில் ரத்தக்களறியாக காட்சியளித்த காலக்கட்டத்தில் ரவீந்திர சிங் மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருந்தார்.
இவரது சட்டச்சிக்கல்கள் 2015-ல் தொடங்கின. அதாவது லோக் ஜனசத்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் நடத்திய ‘நியாய சக்ரா’ என்ற பத்திரிகையில் வெளியான ஒரு செய்திக்கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் அதன் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியதாக சில விஷயங்கள் வெளியாகின. அதாவது சிறுபான்மையினர், அம்பேத்கர் ஆதரவாளர்கள், தலித்துகள் ஆகியோருக்கு பிரச்சினை ஏற்படுத்துமாறு ஆர்எஸ்எஸ். அதன் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியதாக அந்தச் செய்திக் கட்டுரையில் வெளியானது.
அப்போது ரவீந்திர சிங் இந்தச் செய்திக் கட்டுரை குறித்து விசாரணை வேண்டும் என்று பாட்னா உயர் நீதிமன்றத்தில் 2015-ல் ரவீந்திர சிங் ரிட் மனு தாக்கல் செய்தார். ஆனால் பாட்னா உயர் நீதிமன்றம் அடிப்படைகளற்றது என்று கூறி இந்த ரிட் மனுவை தள்ளுபடி செய்தது. மீண்டும் ரவீந்திர சிங் உச்ச நீதிமன்றத்தை அணுகினார் அந்த வழக்கில்தான் தற்போது இவருக்கு ரூ.10 லட்சம் அபராத விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரவீந்திர சிங் கூறும்போது, “நான் 12-14 ஆண்டுகளாக நிழலுலகில் இருந்தேன் (நக்சலைட்), போலீஸார் என் வீட்டை 135 முறை ரெய்டு செய்தனர். என்னுடைய சொத்துகளை 3 முறை பறிமுதல் செய்தனர். லாலு பிரசாத் 1994-ல் முதல்வாரான பிறகே மாவட்ட போலீஸ் அதிகாரி தனது கண்காணிப்பு அறிக்கையில் நான் குற்றமற்றவன் என்று கூறினர்” என்றார்.
மேற்கு பாட்னாவில் 3 படுக்கை அறைகள் கொண்ட சுமாரான ஃபிளாட் ஒன்றில் தனது 100 வயது தாய், மற்றும் குடும்பத்துடன் வசித்து வரும் ரவீந்திர சிங் கூறும்போது, “நான் கோர்ட்டின் இந்த உத்தரவை மதிக்கிறேன், ஆனால் இந்த அபராத உத்தரவைப் பிறப்பிக்கும் முன் என் வங்கிக் கணக்கு, ரொக்க கையிருப்பு அனைத்தையும் அவர்கள் சரிபார்த்திருக்க வேண்டும். மேலும் நான் எதற்காக நீதி கேட்டு கோர்ட் சென்றேனோ அதற்கான நீதி எனக்குக் கிடைக்கவில்லை.
நான் எதற்குக் கவலைப்பட வேண்டும் கோர்ட் எனது நிதிநிலைமைகளை பார்க்கட்டும் பிறகு தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்யட்டும் என்னிடம் துப்பாக்கி மற்றும் ஒரு கார் உள்ளது அவ்வளவே.
நான் கோர்ட்டை அணுகுவதற்கு முன்பாக குடியரசுத் தலைவர், பிரதமர், லோக்சபா தலைவர், உள்துறை செயலர், பிஹார் முதல்வர் ஆகியோருக்குக் கடிதம் எழுதினேன்.
எனக்கு நீதி கிடைக்கவில்லை என்பதோடு, ஏழ்மையில் இருக்கும் நான் எப்படி கோர்ட் அபராதத்தைக் கட்ட முடியும்? என்று கேள்வி எழுப்புகிறார் ரவீந்திர சிங்.
நன்றி : தி இந்து தமிழ்