சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி என்னை பார்த்து சிரிக்காமல் இருந்தால் நல்லது மு.க.ஸ்டாலின் கிண்டல்
சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி என்னை பார்த்து சிரிக்காமல் இருந்தால் நல்லது என தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கிண்டல் செய்து உள்ளார்.
சேலத்தில் தி.மு.க. பிரமுகர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விட்டு இரவு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னை திரும்பினார்.
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- புதிய முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிப்பாரா? ஆட்சி நிலைக்குமா?
பதில்:- முதலில் அவர் சட்டசபையில் என்னைப் பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும். இதுதான் அவருக்கு நல்லதும், பாதுகாப்பும்கூட.
கே:- இந்த ஆட்சியை கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களா?
ப:-அரசியல் சட்டப்படி நிலையான ஆட்சி தமிழகத்தில் நடைபெற வேண்டும் என்று நேரிலும், மனு மூலமாகவும் கவர்னரை சந்தித்த போது வலியுறுத்தினேன். தி.மு.க.வின் உயர்மட்ட கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.
கே:- ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை மக்கள் விரோத கட்சி என்று கூறுகிறாரே!
ப:-இது மக்களின் விரோத ஆட்சிதான்.
கே:- இந்த ஆட்சி எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
ப:-நாளை வரை பொறுத்து இருந்து பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : தினத்தந்தி